Last Updated : 09 Mar, 2025 06:10 AM

 

Published : 09 Mar 2025 06:10 AM
Last Updated : 09 Mar 2025 06:10 AM

12 வருடங்களுக்கு பிறகு மகுடம் சூடுமா இந்திய அணி - இறுதிப் போட்டியில் நியூஸிலாந்துடன் இன்று பலப்பரீட்சை

துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் துபாயில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு மோதுகின்றன.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் வங்கதேசம், பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகளை தோற்கடித்த நிலையில் அரை இறுதியில் ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் கால்பதித்தது. மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணி லீக் சுற்றில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளை வீழ்த்திய நிலையில் இந்தியாவிடம் 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. அரை இறுதியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது.

இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணி 4 சுழற்பந்து வீச்சாளர்கள், 2 வேகங்கள் என்ற பாணியிலேயே களமிறங்கக்கூடும். வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களாக எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளித்து வருகின்றனர். அதிலும் புதிர் சுழற்பந்து வீச்சாளராக உள்ள வருண் சக்ரவர்த்தி லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இடது கை, விரல் ஸ்பின்னர்களான அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் துல்லியமாக செயல்பட்டு நடு ஓவர்களில் எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுப்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

நியூஸிலாந்து அணியில் மிட்செல் சாண்ட்னர், மைக்கேல் பிரேஸ்வெல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சுழற்பந்து வீச்சில் பலம் சேர்க்கக்கூடியவர்களாக உள்ளனர். இதில் சாண்ட்னர், பிரேஸ்வெல் இந்தத் தொடரில் குறிப்பிடத்தக்க பார்மில் உள்ளனர். இவர்கள் இந்திய அணியின் நடுவரிசை அழுத்தம் கொடுக்கக்கூடும். இந்தத் தொடரில் இந்திய அணியில் விராட் கோலி அதிக ரன்கள் குவித்த வீரராக உள்ளார். எனினும் அவர், இடது கை சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தடுமாறக்கூடியவர்.

எனினும் நடப்பு சாம்பியன்ஸ் தொடரில் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் தனது யுத்தியை மாற்றிக் கொண்டுள்ளார். இந்த தொடரில் 60 சதவீத பந்துகளை அவர், கால்களை பின்னால் நகர்த்தி விளையாடி உள்ளார். இது அவரது வழக்கமான பேட்டிங்கிற்கு மாறானது. இதன் காரணமாகவே லீக் சுற்றில் பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிக்கு எதிராக அவரால் வெற்றிக்கான சிறந்த பங்களிப்பை வழங்க முடிந்தது. இதே பாணியை விராட் கோலி இறுதிப் போட்டியிலும் கடைபிடிக்கக்கூடும்.

டாப் ஆர்டரில் ரோஹித் சர்மா இதுவரை பெரிய அளவில் ரன்வேட்டை நிகழ்த்தவில்லை. 4 ஆட்டங்களில் அவர், 104 ரன்களே சேர்த்துள்ளார். ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. இது ஒருபுறம் இருக்க 50 ஓவர்களை கொண்ட ஒருநாள் கிரிக்கெட் வடிவிலான ஐசிசி இறுதிப் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் செயல் திறன் இதற்கு முன்னர் சிறந்ததாக இல்லை. அவர், 3 இறுதி ஆட்டங்களில் 56 ரன்களே சேர்த்துள்ளார். இதில் அதிக பட்ச ஸ்கோர் 43 ஆகும். இதை 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் எடுத்திந்தார். 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் 9 ரன்களிலும், 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் ரன் ஏதும் எடுக்காமலும் நடையை கட்டியிருந்தார் ரோஹித் சர்மா.

விராட் கோலியின் நிலையும் இதேதான். அவர், 4 இறுதிப் போட்டியில் 137 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு அரை சதம் அடங்கும். இதை 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் எடுத்திருந்தார். இதை தவிர்த்து 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 35 ரன்கள், 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் 43 ரன்கள், 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் 5 ரன்களில் வெளியேறியிருந்தார்.

ஐசிசி சாம்பியன்ஸ் தொடருடன் இவர்கள் இருவரும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறக்கூடும் என உறுதி செய்யப்படாத தகவல்கள் வலம் வருகின்றன. ஒருவேளை இது உண்மையாக இருந்தால் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தி கோப்பையை வெல்வதில் அதீத கவனம் செலுத்தக்கூடும். ஷுப்மன் கில் அரை இறுதி ஆட்டத்தில் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்திருந்தார். தேவையான நேரத்தில் நிதானமாக செயல்படும் திறன் கொண்ட அவர், சிறந்த பங்களிப்பை வழங்குவதற்கு முயற்சிக்கக்கூடும்.

நடுவரிசையில் ஸ்ரேயஸ் ஐயர், அக்சர் படேல் இந்தத் தொடரில் அற்புதமாக செயல்பட்டுள்ளனர். லீக் சுற்றில் இந்த ஜோடி நியூஸிலாந்துக்கு எதிராக அற்புதமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டு சவால் கொடுக்கக்கூடிய அளவிலான இலக்கை அமைத்து கொடுத்திருந்தது. அந்த ஆட்டத்தில் இந்த ஜோடி வேகப்பந்து வீச்சாளர்கள் கொடுத்த அழுத்தத்தை சமாளித்து சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தாக்குல் ஆட்டம் மேற்கொண்டிருந்தது. அதிலும் முக்கியமாக பிரேஸ்வெலுக்கு எதிராக அதிக ரன்களை வேட்டையாடியது. நடப்பு தொடரில் ஸ்ரேயஸ் ஐயர் சுழலுக்கு எதிராக 126 ரன்களையும், அக்சர் படேல் 67 ரன்களையும் சேர்த்துள்ளனர்.

இருவரும் கிரீஸைச் சுற்றி நகர்ந்து பந்துவீச்சாளர்களை அவர்களின் லைன் மற்றும் லென்த்தில் சிறப்பாக செயல்டவிடாமல் அழுத்தம் கொடுத்தனர். மேலும் அடிக்கடி ஸ்வீப் ஷாட்களை பயன்படுத்தினர். இது சாதமாக அமைந்திருந்தது. இதனால் இந்த ஜோடியிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். அரை இறுதி ஆட்டத்தில் கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் பின்வரிசையில் அதிரடியாக செயல்பட்டு அசத்தினர். இதேபோன்று இவர்கள் பொறுப்புடன் செயல்படும் பட்சத்தில் அணியின் பலம் அதிகரிக்கும்.

வேகப்பந்து வீச்சை பொறுத்தவரையில் முகமது ஷமி சிறந்த பார்மில் உள்ளார். நடப்பு தொடரில் 8 விக்கெட்கள் கைப்பற்றி அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியில் 2-வது இடத்தில் உள்ள அவர், நியூஸிலாந்து அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். அவருக்கு உறுதுணையாக ஹர்திக் பாண்டியாக செயல்படக்கூடும். 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் அரை இறுதியில் முகமது ஷமி, நியூஸிலாந்துக்கு எதிராக 7 விக்கெட்களை சாய்த்திருந்தார். இதேபோன்ற உயர்மட்ட செயல் திறனை மீண்டும் வெளிப்படுத்துவதில் முகமது ஷமி முனைப்பு காட்டக்கூடும்.

நியூஸிலாந்து அணியின் பேட்டிங் வரிசையில் ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் ஆகியோர் வேகம் குறைந்த பந்துகளில் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். அதிலும் கேன் வில்லியம்சன், ஐசிசி இறுதிப் போட்டிகளில் இதற்கு முன்னர் சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளார். இந்தியாவுக்கு எதிரான லீக் சுற்றில் கூட அவர், 81 ரன்கள் சேர்த்திருந்தார். அதேபோன்று நடப்பு தொடரில் 2 சதங்கள் அடித்துள்ள ரச்சின் ரவீந்திராவும் இந்திய பந்துவீச்சு துறைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.

வில் யங், டாம் லேதம் ஆகியோரும் சீராக ரன்கள் சேர்க்கும் திறன் கொண்டவர்கள். நடுவரிசையில் டேரில் மிட்செல் பலம் சேர்க்கக்கூடியவராக திகழக்கூடும். ஸ்வீப் ஷாட்களில் அவர், சீராக ரன்கள் சேர்ப்பது பலமாக பார்க்கப்படுகிறது. பின்வரிசையில் கிளென் பிலிப்ஸ் தாக்குதல் ஆட்டம் தொடுக்கும் திறன் கொண்டவர். வேகப்பந்து வீச்சை பொறுத்தவரையில் மேட் ஹென்றி பலம் சேர்ப்பவராக திகழ்கிறார். லீக் சுற்றில் அவர், இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

நடப்பு தொடரில் 10 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள மெட் ஹென்றி, அரை இறுதி ஆட்டத்தின் போது காயம் அடைந்தார். தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து அவர், முழுமையாக குணமடையவில்லை. இதனால் அவர், இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவது சந்தேகம் என்றே கூறப்படுகிறது. அவர், விளையாடாத பட்சத்தில் ஜேக்கப் டஃபி களமிறங்கக்கூடும்.

கடைசியாக 2000-ம் ஆண்டு கென்யாவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. 50 ஓவர் வடிவிலான ஐசிசி தொடர்களில் நியூஸிலாந்து அணி வென்றுள்ள ஒரே கோப்பை இதுமட்டுமே. 25 வருடங்களுக்குப் பின்னர் தற்போது மீண்டும் பட்டம் வெல்ல அந்த அணி ஆர்வமுடன் களமிறங்குகிறது. அதேவளையில் கால் நூற்றாண்டுக்குப் பின்னர் அந்த அணிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய அணி இறுதிப் போட்டியை எதிர்கொள்கிறது.

12 வருடங்களுக்குப் பிறகு: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கடைசியாக 2013-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. இதன் பின்னர் 2017-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்திருந்தது. தற்போது 12 வருடங்களுக்குப் பிறகு பட்டம் வெல்வதற்கான வாய்ப்பு கைகூடியுள்ளது.

நாக் அவுட் ராசி எப்படி? ஐசிசி தொடர்களில் இந்திய அணி, நியூஸிலாந்துக்கு எதிராக 10 வெற்றிகளை பெற்றுள்ளது. அதேவேளையில் நியூஸிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக 6 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. ஆனால் நாக் அவுட் சுற்று என்று வரும் போது நியூஸிலாந்து அணியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. நாக் அவுட் சுற்றில் அந்த அணி இந்தியாவுக்கு எதிராக 3 முறை வெற்றியை வசப்படுத்தியுள்ளது. இந்திய அணி ஒரே ஒரு முறை மட்டு வெற்றி கண்டுள்ளது.

ரூ.19.50 கோடி பரிசு: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு அணிக்கு ரூ.19.50 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிக்கும் அணி ரூ.9.72 கோடியை பரிசாக பெறும்.

அந்த ஆடுகளமா இது… சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்றில் விளையாடிய ஆடுகளம் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ஆடுகளத்தில் இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. 242 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 45 பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்றிருந்தது. சுழற்பந்து வீச்சில் குல்தீப் 3 விக்கெட்களையும் அக்சர் படேல், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x