“ஆர்சிபி-யின் வெற்றியே கோலியின் கரியருக்கு நிறைவு தரும்” - ஏபி டி வில்லியர்ஸ் கருத்து

“ஆர்சிபி-யின் வெற்றியே கோலியின் கரியருக்கு நிறைவு தரும்” - ஏபி டி வில்லியர்ஸ் கருத்து
Updated on
1 min read

2025-ல் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது. இந்த ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சென்னையில் நடைபெறும் 3-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. இறுதிச் சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் மே 25-ம் தேதி நடைபெறும்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் ஏபி டி வில்லியர்ஸ், ஷேன் வாட்சன், கிரேம் ஸ்மித், ஸ்காட் ஸ்டைரிஸ், ஆகாஷ் சோப்ரா மற்றும் பலர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முந்தைய சீசன் செயல்பாடு மற்றும் விராட் கோலியின் ஆட்டம் பற்றிய தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

இதில் ஏபி டி வில்லியர்ஸ் கூறும்போது, “விராட் கோலி மீதான ஸ்ட்ரைக் ரேட் விமர்சனங்கள் முட்டாள்தனமானவை. அவர் அணிக்குத் தேவையானதைச் செய்தார். ஸ்ட்ரைக் ரேட் பற்றி பேசுவது பயனற்றது. எந்த பேட்ஸ்மேனும் அணியின் ஆதரவைப் பொறுத்து தனது ஆட்டத்தை மாற்றுகிறார். ஆதரவு இல்லாதபோது, அவர் தனது இயல்பான ஆட்டத்துடன் வெற்றிக்காக முயல்கிறார்.

கோலி புதிய உத்திகளை முயற்சிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆர்சிபி அணிக்கு இந்த ஐபிஎல் வெற்றி கோலியின் அற்புதமான கரியருக்கு நிறைவான ஒன்றாக இருக்கும். ஆர்சிபி-யின் முயற்சியும் செயல்பாடும் குறிப்பிடத்தக்கவை. கோப்பை வெல்லாவிட்டாலும் இந்த சீசனைப் பற்றி பெருமைப்படலாம்” என்று தெரிவித்தார்.

ஷேன் வாட்சன் கூறும்போது, "கோலி பவர் ஹிட்டிங்கை இழந்துவிட்டாரா என்ற கேள்வி எழுந்தது. அவரது ஆட்டம் பாதுகாப்பாக உள்ளது. ஆனால், இன்றைய கிரிக்கெட்டில் சுதந்திரமாக ஆடாவிட்டால் எதிர்காலத்தில் பின்னடைவு ஏற்படலாம்” என்றார்.

மேலும் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், “இந்த கட்டத்திலும் விராட் புதியவற்றைக் கற்று, புதிய உத்திகளை ஏற்றுக்கொள்கிறார். அதுதான் உண்மையான சாம்பியனின் அடையாளம்” என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in