வருண் சக்கரவர்த்தி
வருண் சக்கரவர்த்தி

வருண் சக்கரவர்த்தியை சமாளிப்பது எப்படி என திட்டமிடுகிறோம்: நியூஸிலாந்து பயிற்சியாளர்

Published on

துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தியின் மாயாஜால பந்துவீச்சை சமாளிப்பது எப்படி என திட்டமிட்டு வருவதாக நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் (Gary Stead) தெரிவித்துள்ளார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளன. இரு அணிகளும் ஒரே குரூப்பில் இந்த தொடரில் இடம்பெற்ற காரணத்தால் ஏற்கெனவே இந்த தொடரில் பலப்பரீட்சை மேற்கொண்டுள்ளன. அந்த மோதலில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த முறை வெற்றி பெறுகின்ற அணி சாம்பியன் பட்டத்தையும் வெல்லும். அதனால் இந்த போட்டியின் மீது எதிர்பார்ப்பு கூடி உள்ளது.

இந்த நிலையில் இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி குறித்து நியூஸிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறும்போது, “கடந்த முறை இந்தியா - நியூஸிலாந்து இடையிலான ஆட்டத்தில் வருண் தனது திறனை வெளிப்படுத்தி இருந்தார். அவர் ஆட்டத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலை அளிக்கிறார். அதனால் அவரை சமாளிப்பது எப்படி என நாங்கள் யோசித்து வருகிறோம். அவருக்கு எதிராக ரன் சேர்ப்பது குறித்து திட்டமிட்டு வருகிறோம்.

இந்திய அணியில் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஆனால், நாங்கள் எங்கள் திட்டத்திலும் வியூகத்திலும் தெளிவாக இருக்க விரும்புகிறோம். எல்லா நாளும் வெற்றி பெற முடியாது. அதனால் அவர்களது சறுக்கல் எங்களுக்கு சாதகமாக அமையலாம். இருந்தாலும் அதை யாரும் கணிக்க முடியாது.

எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடி ரன் சேர்க்கின்றனர். துபாயில் இந்த தொடரில் இந்தியாவுக்கு எதிராக விளையாடி உள்ளோம். நிச்சயம் அந்த ஆட்டத்தின் அனுபவம் எங்களுக்கு இறுதிப் போட்டியில் கைகொடுக்கும். கடந்த போட்டியில் 360+ ரன்கள் எடுத்தோம். அதை இறுதிப் போட்டியில் செய்ய முடியுமா என தெரியவில்லை. அப்படி எண்ணுவது எங்களுக்கு ஆபத்தாக போகலாம். ஆடுகளத்தின் சூழல், எதிர்கொள்ளும் அணி போன்றவற்றை பார்க்க வேண்டி உள்ளது. அதை வைத்து பார்க்கும் போது டீசென்டான ரன்களை எடுக்க விரும்புகிறோம்” என அவர் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in