

பரேலி: புனித ரமலான் மாத நோன்பினை நோற்காமல் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி பாவம் செய்துள்ளார் என அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தேசியத் தலைவரான மவுலானா சஹாபுத்தீன் ரஸ்வி பரேல்வி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது ஒவ்வொரு இஸ்லாமியரின் முக்கிய கடமை ஆகும். இது ஷரியத் விதியின்படி இஸ்லாமியர்கள் அவசியம் பின்பற்ற வேண்டி உள்ளது. ஒருவர் வேண்டுமென்றே நோன்பு நோற்காமல் இருந்தால் அவர் பாவியாகக் கருதப்படுவார். அந்த வகையில் நோன்பு நோற்காத இந்திய கிரிக்கெட் வீரர் ஷமி பாவி ஆகியுள்ளார். அவர் இதை செய்திருக்க கூடாது.
கிரிக்கெட் விளையாடுவது தவறு இல்லை. ஆனால், ஷமி தனது மத சம்பிரதாயங்களை கடைபிடித்திருக்க வேண்டும். இனியாவது அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது” என மவுலானா சஹாபுத்தீன் ரஸ்வி பரேல்வி கூறியுள்ளார்.
இது தொடர்பாக மவுலானா சஹாபுத்தீன் ரஸ்வி பரேல்வி வெளியிட்டுள்ள வீடியோவில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான போட்டியின்போது ஷமி நீர் ஆகாரம் பருகியதை பார்த்ததாக கூறியுள்ளார். அவரது இந்தக் கருத்துக்கு பாஜகவை சேர்ந்த மொஹ்சின் ராசா கண்டனம் தெரிவித்துள்ளார். “இது அல்லாவுக்கும், தனிப்பட்ட ஒருவருக்கும் இடையிலானது. இதில் கருத்து கூற மவுலானா சஹாபுத்தீன் ரஸ்வி பரேல்விக்கு உரிமை இல்லை. ஷமி தற்போது தேசத்துக்காக விளையாடி வருகிறார். இந்தச் சூழலில் அவர் இப்படி செயல்பட இஸ்லாம் அனுமதிக்கிறது” என மொஹ்சின் ராசா கூறியுள்ளார்.
34 வயதான ஷமி, நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். 4 போட்டிகளில் 32 ஓவர்கள் வீசி 159 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி உள்ளார். காயத்தில் இருந்து மீண்ட அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.