Published : 06 Mar 2025 10:44 AM
Last Updated : 06 Mar 2025 10:44 AM
லாகூர்: நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் தோல்வியை தழுவி உள்ளது தென் ஆப்பிரிக்க அணி. இருப்பினும் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லரின் ‘ஒன் மேன் ஷோ’ கவனம் ஈர்த்தது.
லாகூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நியூஸிலாந்து நிர்ணயித்த 363 ரன்கள் இலக்கை தென் ஆப்பிரிக்கா விரட்டியது. 28.4 ஓவர்களில் 167 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை தென் ஆப்பிரிக்கா அணி இழந்திருந்த நிலையில் பேட் செய்ய வந்தார் மில்லர். இறுதி வரை ஆட்டமிழக்காமல் அவர் ஆட்டத்தின் கடைசிப் பந்தில் சதம் பதிவு செய்தார். அவருடன் தென் ஆப்பிரிக்க அணியின் ரெகுலர் பேட்ஸ்மேன்களில் யாரேனும் ஒருவர் ஆட்டத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தி இறுதிவரை களத்தில் உறுதுணையாக நின்று இருந்தால் ஆட்டத்தின் முடிவு கூட மாறி இருக்கலாம்.
67 பந்துகளில் மில்லர் சதம் விளாசினார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளை எதிர்கொண்டு விரைவாக பதிவு செய்த சதமாக இது அமைந்துள்ளது. 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை அவர் இந்த இன்னிங்ஸில் விளாசி இருந்தார். இதற்கு முன்னர் கடந்த 2002-ல் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 77 பந்துகளில் சதம் விளாசி இருந்தார் இந்திய வீரர் சேவாக். இந்த சாதனையை நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இதே லாகூர் மைதானத்தில் அதே இங்கிலாந்து அணிக்கு எதிராக சமன் செய்திருந்தார் ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் இங்கிலிஸ்.
ஐசிசி தொடர்களில் நாக் அவுட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் மில்லர். 2013 சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 51 பந்துகளில் 56 ரன்கள் (நாட்-அவுட்), 2015 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக 18 பந்துகளில் 49 ரன்கள், 2023 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 101 ரன்களை மில்லர் இதற்கு முன்னர் பதிவு செய்துள்ளார். இப்போது மீண்டும் ஒரு சதம் என அவரது ரெக்கார்ட் உள்ளது.
நாக் அவுட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு தொடரும் சோகம்: தென் ஆப்பிரிக்க அணிக்கு ஐசிசி தொடரின் நாக் அவுட் போட்டி என்றாலே அதன் முடிவு சோகமானதாக அமைந்து விடுகிறது. ஐசிசி நடத்தும் ஒருநாள் தொடரின் அரை இறுதியில் மட்டும் 11 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா விளையாடி உள்ளது. அதில் 9 ஆட்டங்களில் தோல்வியை தழுவி உள்ளது. ஒரு போட்டியில் வெற்றி மற்றும் ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்தியாவிடம் தென் ஆப்பிரிக்கா தோல்வியை தழுவியது. அடுத்த சில மாதங்களில் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதியில் ஆஸ்திரேலியாவை அந்த அணி எதிர்கொள்ள உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT