

‘டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் 2025’ தொடர் வரும் 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதுதொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் இதில் பங்கேற்ற இந்திய டேபிள் டென்னிஸ் நட்சத்திர வீரரான சரத் கமல் கூறும்போது, “சென்னையில்தான் எனது டேபிள் டென்னிஸ் வாழ்க்கையை தொடங்கினேன். இப்போது மதிப்பு மிக்க ஸ்டார் கன்டென்டர் தொடருடன் சென்னையிலேயே எனது டேபிள் டென்னிஸ் வாழ்க்கையை நிறைவு செய்கிறேன்” என உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்தார்.
டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவின் அந்தஸ்தை மறுவரையறை செய்த மற்றும் எண்ணற்ற வீரர்களுக்கு உத்வேகம் அளித்த சரத் கமலுக்கு பொருத்தமான பிரியாவிடை அளிக்கும் டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் தொடராக இருக்கக்கூடும். இந்தத் தொடரில் பத்மஸ்ரீ மற்றும் அர்ஜுனா விருது பெற்ற சரத் கமல், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி நான்கு வீரர்களில் ஒருவராக இருப்பார். மேலும் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சரத் கமல், சினேஹித் சுரவஜ்ஜுலா உடன் இணைந்து தகுதிச் சுற்றில் விளையாட உள்ளார்.
1999-ம் ஆண்டு ஜூனியர் பிரிவில் சரத் கமல் தனது சொந்த மண்ணில் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றார். இதன் பின்னர் தற்போது முதன்முறையாக சொந்த மண்ணில் சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடரில் விளையாட உள்ளார்.
சரத் கமல் கூறும்போது, “இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கனவில் நான் வாழ்ந்தேன், என் மார்பில் தேசிய கொடியின் எடையை உணர்ந்தேன், டேபிள் டென்னிஸ் மேசையில் அனைத்தையும் கொடுத்தேன். இது எல்லாம் சென்னையில் ஒரு சிறிய அறையில், ஒரு ராக்கெட்டையும் கனவையும் தவிர வேறெதுவும் இல்லாமல் தொடங்கியது. இந்த பயணம் நான் கனவு கண்ட இடங்களுக்கு என்னை அழைத்துச் செல்லும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ‘டிபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் சென்னை 2025’ தொடர் தொழில்முறை வீரராக எனது கடைசி போட்டியாக இருக்கும்” என்றார்.
சரத் கமல் காமன்வெல்த் விளையாட்டில் 7 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 13 பதக்கங்கள் வென்றுள்ளார். மேலும் ஆசிய விளையாட்டில் 2 வெண்கலப் பதக்கம், ஆசிய சாம்பியன்ஷிப்பில் 4 வெண்கலப் பதக்கம் கைப்பற்றியுள்ளார். சரத் கமல் அளவுக்கு இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்களில் யாரும் ஒலிம்பிக்கில் பங்கேற்றதில்லை. அவர், 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்று விளையாட்டை அலங்கரித்துள்ளார். 2024-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் அணிவகுப்பில் இந்திய தேசிய கொடியை ஏந்திச் சென்றார். 10 முறை தேசிய சாம்பியனான சரத் கமல், சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் புரோ டூர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் ஆவார், தற்போது டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் தொடரில் சொந்த மண்ணில் சாதனை படைத்து டேபிள் டென்னிஸ் வாழ்க்கையை வெற்றிகரமாக நிறைவு செய்யும் முனைப்புடன் உள்ளார்.
22 வருடங்களாக நாட்டின் முன்னணி வீரராக வலம் வரும் சரத் கமல், உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா, ஜப்பான், தென் கொரியா, ஐரோப்பிய நாடுகளின் ஜாம்பவான்களுக்கு எதிராக இந்திய டேபிள் டென்னிஸின் இருப்பை நிலைநிறுத்தியவர். நெற்றியில் கைக்குட்டையை கட்டிக்கொண்டு மேசையில் ஆக்ரோஷமாக அவர், விளையாடிய விதம் ஆயிரக்கணக்கான வளர்ந்து வரும் இந்திய வீரர்களை கவர்ந்திழுத்தது.
டேபிள் டென்னிஸ் வாழ்க்கையில் சரத் கமல் ஏற்ற, இறக்கங்களையும் கொண்டிருந்தார். 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பின் போது அவருக்கு இடுப்பு மற்றும் தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது. இது அவரது டேபிள் டென்னிஸ் வாழ்க்கையில் ஒரு பெரிய பின்னடைவாக இருந்தது. ஆனால் அதில் இருந்து அவர், மீண்டு வந்து வலுவான செயல் திறனை வெளிப்படுத்தி மேற்கொண்டு 3 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வியப்பில் ஆழ்த்தினார்.
2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா, ஜப்பானை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றதில் சரத் கமல் முக்கிய பங்கு வகித்தார். தனது 40 வயதில், 2022-ம் ஆண்டு பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 3 தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார்.
சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் (ஐடிடிஎஃப்) வீரர்கள் ஆணையத்தின் உறுப்பினராகவும் சரத் கமல் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வீரர்கள் ஆணையத்திலும் அவர், முக்கிய பங்காற்றி உள்ளார். சர்வதேச போட்டி மற்றும் தொழில்முறை போட்டிகளில் இருந்து சரத் கமல் ஓய்வு பெற்ற போதிலும் விளையாட்டின் மேம்பாட்டுக்காக அடுத்த கட்டத்தை நோக்கியும் பயணிக்க முடிவு செய்துள்ளார்.
மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் டேபிள் டென்னிஸ் விளையாட்டை மேம்படுத்துவதற்கான உயர்செயல் திறன் மையம் அமைக்கப்பட உள்ளது. இதில் இணைந்து பணியாற்ற சரத் கமல் முடிவு செய்துள்ளார். இந்த மையத்தின் வாயிலாக அடிமட்ட அளவில் விளையாட்டை வளர்த்தெடுக்கவும் திறமையான வீரர்களை கண்டறிந்து அவர்களை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான உரிமையை பெறுவதில் இந்தியா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதை இலக்காக கொண்டு இளம் வீரர், வீராங்கனைகளின் திறமை கூர்மைபடுத்தி தன்னால் அலங்கரிக்க முடியாத ஒலிம்பிக் பதக்க மேடையை அவர்களை கொண்டு சாதிப்பதற்கான முயற்சியை கையில் எடுக்க உள்ளார் சரத் கமல். இதற்கு பலன் கிடைத்தால் அதைவிட அவரது வாழ்நாள் சாதனையாக வேறு ஏதும் இருக்க முடியாது. ஆனால் அதற்கான காலம் என்பது வெகு தொலைவில் உள்ளது.