Published : 05 Mar 2025 07:03 PM
Last Updated : 05 Mar 2025 07:03 PM
லாகூர்: நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு நியூஸிலாந்து அணி 363 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. நியூஸிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா மற்றும் கேன் வில்லியம்சன் சதம் கடந்து அசத்தினர்.
பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். யங், 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த கேன் வில்லியம்சன் உடன் 2-வது விக்கெட்டுக்கு 164 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் ரச்சின். இருவரும் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சை திரும்பட கையாண்டனர். சிறப்பான ஆட்டத்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது ஐந்தாவது சதத்தை ரச்சின் பதிவு செய்தார். இந்த ஐந்து சதங்களையும் அவர் ஐசிசி ஒருநாள் தொடர்களில் எடுத்துள்ளார். ஐசிசி தொடரில் 13 இன்னிங்ஸ் ஆடி இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். அவர் 108 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய கேன் வில்லியம்சனும் சதம் பதிவு செய்தார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக கடைசியாக விளையாடிய (இந்த ஆட்டத்துடன் சேர்த்து) மூன்று போட்டிகளில் அவர் சதம் விளாசி உள்ளார். அவர் 102 ரன்களில் ஆட்டமிழந்தார். ஐசிசி ஒருநாள் தொடர்களில் நியூஸிலாந்து தரப்பில் அதிக சதம் பதிவு செய்துள்ள வீரர்களின் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் ரச்சின் மற்றும் வில்லியம்சன் உள்ளனர்.
டாம் லேதம் ரன் அவுட் ஆனார். மிட்செல், 37 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிரேஸ்வெல் 16 ரன்கள் எடுத்தார். கிளென் பிலிப்ஸ், அதிரடியாக ஆடி 27 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். கேப்டன் சான்ட்னர் 2 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 362 ரன்கள் எடுத்தது நியூஸிலாந்து. அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 363 ரன்கள் என்ற இலக்கை விரட்டுவது சவாலானதாக அமைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT