

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 அரையிறுதியில் விராட் கோலியின் அற்புதமான சேஸிங்கில் ஸ்ரேயாஸ் ஐயருடன் சேர்ந்து அடித்தளம் அமைத்துக் கொடுக்க இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிக்குள் சென்றது. ஆனால், ஆஸ்திரேலியா பேட் செய்த போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சக இந்திய வீரர் மீது வசைமாரி பொழிந்தது நெட்டிசன்கள் மத்தியில் அவ்வளவு நல்ல வரவேற்பைப் பெறவில்லை.
32-வது ஓவரில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், குல்தீப் யாதவ் வீசிய பந்தை மிட்விக்கெட்டில் பிளிக் செய்து விட்டு ஒரு ரன் ஓடினார், அது ஒரு ரன் தான். டீப் மிட்விக்கெட்டில் பந்தை எடுத்த விராட் கோலி நேராக குல்தீப் யாதவுக்கு பவுலர் முனையில் த்ரோ செய்தார். பந்து ஸ்டம்பைத் தாக்கலாம் என்று தவறாகக் கணித்த குல்தீப் பந்தை பிடிக்காமல் விட அது அவரைத் தாண்டி நின்று கொண்டிருந்த கேப்டன் ரோஹித் சர்மாவிடம் சென்றது.
பந்தை விட்டவுடன் விராட் கோலி, குல்தீப் யாதவை நோக்கி ‘அரே யா...ர் ... சோத்’ என்று சொல்வது போன்ற வாயசைவை காமிராக்கள் கச்சிதமாகப் பிடித்து விட்டன. ஏதோ வசையை குல்தீப் மீது ஏவியுள்ளார் விராட் கோலி என்பது பட்டவர்த்தனமானது.
த்ரோவைப் பிடித்த ரோஹித் சர்மாவும் குல்தீப் யாதவ் மீது கடும் வசைமாரி பொழிந்ததும் காமிராவில் பதிவாகி ஊடகங்களில் வெளியாக, நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் சிலர் உயர்தர நிலைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய நிர்பந்தத்தை வலியுறுத்துவதைப் பாராட்டினர். ஆனால், அதை வெளிப்படுத்தும் விதங்களில் நய நாகரிகம் வேண்டும் என்றும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.
வேறு சில நெட்டிசன்களோ ‘மூத்த வீரர்கள், பலருக்கும் நாயகர்களாகத் திகழும் கோலி, ரோஹித் போன்றவர்கள் இப்படி கீழ்த்தரமாக சக வீரரையே கெட்ட வார்த்தைகளில் வசைமாறி பொழியலாமா?’ என்று கேள்வி எழுப்பி வருத்தம் தெரிவித்துள்ளனர்.
குல்தீப் யாதவை நேற்று ரோஹித் சர்மா சரியாகப் பயன்படுத்தவில்லை. ரோஹித் கேட்பன்சியில் கொஞ்சமாவது முன்னேற்றம் காட்ட வேண்டும். ஸ்டீவ் ஸ்மித் இறங்கிய போதே அவரை வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப்பை வைத்து நெருக்கி இருக்க வேண்டும் மாறாக குல்தீப் யாதவுக்கு மட்டமான பீல்டை செட் செய்து அவர் 8 ஓவர்களில் 44 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதற்கு அவரது பவுலிங் காரணமல்ல, கற்பனை வளமற்ற, ஆக்ரோஷமற்ற ரோஹித் சர்மாவின் கேப்டன்சியே காரணம். இதை சரி செய்து கொள்ள தெரியாமல் ஒரு த்ரோவை விட்டதற்கு குல்தீப் யாதவ்வை திட்டலாமா என்பதே நம் கேள்வி.