''ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு'' - ஸ்டீவ் ஸ்மித் அறிவிப்பு

''ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு'' - ஸ்டீவ் ஸ்மித் அறிவிப்பு
Updated on
1 min read

துபாய்: நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் முதல் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தோல்வியை தழுவியது. இதையடுத்து ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்த தொடரில் அந்த அணியினை வழிநடத்திய ஸ்டீவ் ஸ்மித் அறிவித்துள்ளார்.

35 வயதான ஸ்டீவ் ஸ்மித், கடந்த 2010-ல் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் அறிமுக வீரராக களம் கண்டார். சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக அணியில் என்ட்ரி கொடுத்து தவிர்க்க முடியாத பேட்ஸ்மேனாக உருவெடுத்தார்.

மொத்தம் 170 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 5,800 ரன்களை எடுத்துள்ளார். 12 சதம் மற்றும் 35 அரை சதங்களை பதிவு செய்துள்ளார். 28 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். 2015 மற்றும் 2023-ல் உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்தவர். ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் நாக்-அவுட் போட்டிகளில் 418 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

“இது சிறந்தவொரு பயணமாக இருந்தது. அதன் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்தது உண்டு. மறக்க முடியாத அற்புத தருணங்கள் மற்றும் அற்புத நினைவுகள் இதில் அடங்கும். இரண்டு உலகக் கோப்பைகளை வென்ற அணியில் அங்கம் வகித்துள்ளேன்.

எதிர்வரும் 2027 உலகக் கோப்பை தொடருக்கு அணி சிறந்த முறையில் தயாராக இது சரியான முடிவாக இருக்கும் என கருதுகிறேன். அடுத்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் பல்வேறு அணிகள் உடனான டெஸ்ட் தொடர்களை எதிர்பார்த்துள்ளேன்” என ஸ்மித் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in