

காமன்வெல்த் போட்டிக்காக கிளாஸ்கோ சென்றிருந்த இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தா, மல்யுத்த நடுவர் வீரேந்திர மில்கா ஆகியோர் முறையே குடித்து விட்டு கார் ஓட்டுதல், பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அறிக்கை கிடைத்த பிறகு அரசு தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் தெரிவித்துள்ளார். காமன்வெல்த் போட்டிக்காக ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்கு சென்ற வீரர்களுடன் அதிகாரிகள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் என பலரும் சென்றனர்.
இதில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி அந்நாட்டு போலீஸார் கைது செய்யப்பட்ட ராஜீவ் மேத்தா, வீரேந்திர மில்கா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்தியாவின் முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் கூறுகையில், காமன்வெல்த் போட்டியில் நமது வீரர்கள் பலர் பதக்கங்களை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். ஆனால் அந்த இரு அதிகாரிகளும் தேசத்துக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் மீது நமது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.