Published : 03 Mar 2025 12:24 AM
Last Updated : 03 Mar 2025 12:24 AM
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வருண் சக்கவர்த்தி அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதையடுத்து முதல் அரை இறுதியில் ஆஸ்திரேலிய அணியை, இந்தியா எதிர்த்து விளையாடும்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதிய கடைசி லீக் ஆட்டம் துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.
டாஸில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. தொடக்க வீரர்களாக ஷுப்மன் கில்லும், கேப்டன் ரோஹித் சர்மாவும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே தடுமாறிய ஷுப்மன் கில் 7 பந்துகளில் 2 ரன்கள் எடுத்திருந்தபோது, மேட் ஹென்றி பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ரோஹித்துடன், விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 17 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் ரோஹித் ஜேமிசன் பந்தில், வில் யங்கிடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்தார். இதைத் தொடர்ந்து கோலியுடன், ஸ்ரேயஸ் ஐயர் இணைந்தார். அணியின் ஸ்கோர் 30-ஆக இருந்தபோது விராட் கோலி ஆட்டமிழந்தார். மேட் ஹென்றி வீசிய பந்தை, விராட் கோலி விளாச, அதைபாய்ந்து சென்று அபாரமாக கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார் கிளென் பிலிப்ஸ். விராட் கோலி 14 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதனால் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் என்ற மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.
இதையடுத்து 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்ரேயஸ் ஐயரும், அக்சர் படேலும் நிதானமாக விளையாடி இன்னிங்ஸை கட்டமைத்தனர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்தது. அக்சர் 61 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து அவுட்டானார். ஆனால் மறுமுனையில் நிதானமாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் அரை சதம் கடந்தார். 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வில்லியம் ஓ ரூர்க்கி பந்தில் அவர் வீழ்ந்தார்.
கே.எல்.ராகுல் 23, ரவீந்திர ஜடேஜா 16, முகமது ஷமி 5, குல்தீப் யாதவ் ஒரு ரன் சேர்த்தனர். கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 45 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து வீழ்ந்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து அணி விளையாடத் தொடங்கியது. ஆனால் 45.3 ஓவர்களில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து நியூஸிலாந்து தோல்வி கண்டது.
அந்த அணியின் வில் யங் 22, ரச்சின் ரவீந்திரா 6, கேன் வில்லியம்ஸன் 81, டேரில் மிட்செல் 17, டாம் லேதம் 14, கிளென் பிலிப்ஸ் 12, மைக்கேல் பிரேஸ் வெல் 2, மிட்செல் சான்ட்னர் 28, வில்லியம் ஓ ரூர்க்கி 1, கைல் ஜேமிசன் 9 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 5, குல்தீப் யாதவ் 2, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT