

துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் துபாயில் இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதின.
பிற்பகம் 2.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சார்பில் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஜோடி ஓப்பனிங் இறங்கியது. எனினும் அடுத்தடுத்த விக்கெட் இழப்பால் இந்திய வீரர்கள் தடுமாற்றத்தை சந்தித்தனர்.
ரோஹித் 15 ரன்களுடன் வெளியேற கில் வெறும் 2 ரன்களுடன் நடையை கட்டினார். அடுத்து இறங்கிய விராட் கோலி ஆறாவது ஓவரில் கிளென் பிலிப்ஸுக்கு கேட்ச் கொடுத்து அதிர்ச்சி தந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் (79) மற்றும் அக்சர் படேல் (42) இணை அணியின் ஸ்கோரை ஏற்றியது.
அடுத்து வந்த கே.எல்.ராகுல் 23 ரன்கள், ஹர்திக் பாண்டியா 45, ஜடேஜா 16, ஷமி 5, குல்தீப் யாதவ் 1 ரன்கள் என 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு மொத்தம் 249 ரன்களை இந்திய அணி எடுத்திருந்தது.
250 ரன்கள் என்ற இலக்குடன் அடுத்து இறங்கிய நியூஸி. அணியின் ஓப்பனர்கள் வில் யங் 22 ரன்களும், ரச்சின் ரவீந்திரா ஆறு ரன்களும் எடுத்து வெளியேறினர். அடுத்து இறங்கிய கேன் வில்லியம்சன் 81 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனையடுத்து அணியில் யாரும் சொல்லிக் கொள்ளும்படியான ரன்களை சேர்க்கவில்லை. 45.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களும் காலியாக 205 ரன்களில் இந்திய அணியிடம் 44 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது நியூஸிலாந்து.
இரு அணிகளுமே தலா 2 வெற்றிகளை பதிவு செய்து அரை இறுதி சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டன என்பதால் இன்றைய ஆட்டத்தின் முடிவு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. இந்த தொடரின் முதல் அரை இறுதிப் போட்டி வரும் மார்ச் 4-ம் தேதி துபாயில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியா உடன் மோதுகிறது.