Published : 02 Mar 2025 09:53 AM
Last Updated : 02 Mar 2025 09:53 AM

நியூஸிலாந்துடன் இன்று மோதல்: ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்திய அணி?

துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் துபாயில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளுமே தலா 2 வெற்றிகளை பதிவு செய்து அரை இறுதி சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டன. இதனால் இன்றைய ஆட்டத்தின் முடிவு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. எனினும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தனது பிரிவில் முதலிடத்துடன் லீக் சுற்றை நிறைவு செய்யும். இந்திய அணி அரை இறுதி சுற்றில் தென் ஆப்பிரிக்கா அல்லது ஆஸ்திரேலியாவை சந்திக்கக்கூடும்.

இந்தியா, நியூஸிலாந்து ஆகிய இரு அணியிலும் திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இந்திய அணி இரு லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்ற போதிலும் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ரன்கள் சேர்ப்பதில் அசவுகரியங்களை சந்தித்தது. வங்கதேச அணியின் மெஹிதி ஹசன் மிராஸுக்கு எதிராக 37 ரன்களையும், ரிஷார் ஹொசைனுக்கு எதிராக 38 ரன்களையும் (2 விக்கெட்), பாகிஸ்தானின் அப்ரார் அகமதுவுக்கு எதிராக 28 ரன்களையும் (ஒரு விக்கெட்) மட்டுமே இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் எடுத்தனர். இவர்களுக்கு எதிராக எந்த ஒரு கட்டத்திலும் இந்திய வீரர்கள் ரிஸ்க் எடுக்கவில்லை.

இதனால் இன்றைய ஆட்டத்தில் மிட்செல் சாண்ட்னர், மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் தங்களது சுழலால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட ஆடுகளங்களில் போட்டி நடைபெறுவதால் ஆடுகளத்தின் தன்மையை இவர்கள் இருவரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளக்கூடும்.

இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இந்தத் தொடர் முழுவதும் வேகப்பந்து வீச்சில்தான் விரைவாக ரன்கள் சேர்த்துள்ளனர். அதேவேளையில் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சாமர்த்தியமாக செயல்பட்டு ஒன்று, இரண்டு ரன்களை சீராக எடுத்துள்ளனர். ஆனால் இன்றைய ஆட்டத்தில் சாண்ட்னர், பிரேஸ்வெல் ஆகியோர் முழுமையாக 20 ஓவர்களை வீசக்கூடும். மேலும் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளராக கிளென் பிலிப்ஸும் அணியில் உள்ளார்.

இவர்களை இந்திய அணி வீரர்கள் எப்படி சமாளித்து ரன்கள் சேர்க்கப் போகிறார்கள் என்பதை காண ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்படக்கூடும். ஏனெனில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மிட்செல் சாண்ட்னர், கிளென் பிலிப்ஸ் ஆகியோரது சுழலில் இந்திய அணி தடுமாற்றம் அடைந்து படுதோல்வியை சந்தித்து இருந்தது. இப்போது பிரெஸ்வெல்லும் இணைந்திருப்பது இந்திய அணிக்கு கூடுதல் சவாலாக இருக்கக்கூடும்.

பிரேஸ்வெல், நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடி உள்ள 2 ஆட்டங்களிலும் ஓவருக்கு சராசரியாக 3.2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். இதனால் இன்றைய ஆட்டம் சிறந்த பார்மில் உள்ள ஷுப்மன் கில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த விராட் கோலி, நடுவரிசை பேட்ஸ்மேன்களான ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆகியோருக்கு கடும் சோதனை அளிக்கக்கூடும்.

கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு தொடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவது சந்தேகமே. அவர், விளையாடாவிட்டால் ஷுப்மன் கில் அணியை வழிநடத்துவார். ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ரிஷப் பந்த் களமிறக்கப்படக்கூடும். மேலும் முகமது ஷமிக்கு ஓய்வு கொடுக்கப்படலாம். அவரது இடத்தில் அர்ஷ்தீப் சிங் களமிறங்க வாய்ப்பு உள்ளது. இதேபோன்று சுழற்பந்து வீச்சில் வருண் சக்கரவர்த்தி அல்லது வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் இந்தத் தொடரில் நடு ஓவர்களில் எதிரணியின் ரன் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தினர். இவர்கள் ஓவருக்கு 5 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுக்கவில்லை. மேலும் எதிரணி பேட்ஸ்மேன்களை தாக்குதல் ஆட்டம் தொடுக்கவும் அனுமதிக்கவில்லை. பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக 9 ஓவர்களில் ஒரு பவுண்டரியை கூட அடிக்க முடியாமல் திணறியது.

ஆனால் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு வியூகம் நியூஸிலாந்து அணிக்கு எதிராக எடுபடுமா என்பது சந்தேகம்தான். ஏனெனில் அந்த அணியில் கேன் வில்லியம்சன், வில் யங், டாம் லேதம், டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். இவர்கள் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x