Published : 01 Mar 2025 11:54 PM
Last Updated : 01 Mar 2025 11:54 PM
கராச்சி: நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றில் ‘பி’ பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது தென் ஆப்பிரிக்கா. இதே பிரிவில் ஒரு வெற்றி கூட இல்லாமல் வெளியேறி உள்ளது இங்கிலாந்து அணி.
கராச்சியில் நடைபெற்ற குரூப் சுற்று போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 38.2 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் 37 ரன்கள் எடுத்தார்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்க்கோ யான்சன் மற்றும் முல்டர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். கேஷவ் மகாராஜ் 2, லுங்கி இங்கிடி மற்றும் ரபாடா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென் ஆப்பிரிக்கா விரட்டியது.
தென் ஆப்பிரிக்க வீரர் ஸ்டப்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். ரியான் ரிக்கில்டன் 27 ரன்கள் எடுத்தார். ராஸி வாண்டர் டுசன் 72 மற்றும் கிளாசன் 64 ரன்கள் எடுத்தனர். 29.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ‘பி’ பிரிவில் 5 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளது தென் ஆப்பிரிக்கா. இந்த பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளன. ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளன. இந்தியா மற்றும் நியூஸிலாந்து இடையிலான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் அரை இறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும். இந்த ஆட்டத்தில் இந்தியா தோல்வியை தழுவினால் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளும்.
வெற்றியின்றி வெளியேறிய இங்கிலாந்து: ஒருநாள் கிரிக்கெட் பார்மெட்டை பொறுத்தவரையில் இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய 7 போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது. இந்தியா உடனான 3 போட்டி, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா வசம் தோல்வியை தழுவி உள்ளது. இதற்கு முன்னர் கடந்த நவம்பர் மாதம் மேற்கு இந்தியத் தீவுகள் உடனான போட்டியில் இங்கிலாந்து தோல்வியை தழுவி இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT