Last Updated : 28 Jul, 2018 09:52 PM

 

Published : 28 Jul 2018 09:52 PM
Last Updated : 28 Jul 2018 09:52 PM

‘கேலி செய்த இங்கிலாந்து வீரர்கள்’; ‘பதிலடி கொடுத்த ஜாகிர்கான்’: டிராவிட் தலைமையில் வென்றது குறித்து தினேஷ் கார்த்திக் ருசிகரம்

 

ஜாகீர்கானை கேலி செய்த இங்கிலாந்து வீரர்களுக்குப் பதிலடி கொடுத்து, கடந்த 2007-ம் ஆண்டு டிராவிட் தலைமையில் வெற்றியுடன் இங்கிலாந்து தொடரை முடித்தோம் என்று தனது நினைவுகளை தினேஷ் கார்த்திக் ருசிகரமாகப் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் டெஸ்ட் அணியில் 10 ஆண்டுகளுக்குப் பின் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விர்திமான் சாஹாவுக்கு ஏற்பட்ட காயம் குணமடையாத காரணத்தால் வாய்ப்பு பெற்ற தினேஷ் கார்த்திக் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் இடம் பிடித்தார்.

டிராவிட் தலைமையில் கடந்த 2007-ம் ஆண்டு இங்கிலாந்து பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றிருந்தார். 3 போட்டிகள் கொண்ட அந்த தொடரில் லாட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் 60ரன்கள், டிரன்ட்பிரிட்ஜ் 77 ரன்கள், ஓவலில் 91 ரன்கள் சேர்த்து தினேஷ் கார்த்திக் முக்கியப் பங்காற்றினார்.

இங்கிலாந்துக்கு எதிரான அந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்றது. இந்த வெற்றி குறித்தும், அங்கு நடந்த சில சுவையான விஷயங்கள் குறித்து பிசிசிஐ டிவிக்கு தினேஷ் கார்த்திக் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது:

10 ஆண்டுகளுக்குப்பின் டெஸ்ட் தொடரில் விளையாடுவது சிறிது பதற்றமாகவும், அதேசமயம், கிளர்ச்சியாக, உற்சாகமாக இருக்கிறது. நீண்டஇடைவெளிக்கு பின் விளையாடுவதால், மிகவும் எதிர்பார்க்கிறேன். அதிலும் இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது சவாலானது. மற்ற வீரர்களைப் போல் அல்லாமல், நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.

என்னால் அதிகமான விஷயங்களை நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. எனக்கு ஞாபகமறதி அதிகம். ஆனால், சிலவிஷயங்கள் மறக்காமல் இருக்கின்றன. இரு அணிகளுக்கும் அந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானதாக இருந்தது.

இங்கிலாந்தும் அதிகமான மாற்றங்களை அணியில் செய்யவில்லை, நாங்களும் செய்யவில்லை என்பதால், மிகுந்த போட்டியுள்ளதாக, தரமான போட்டியாக இருந்தது. ஒவ்வொரு போட்டியிலும், வீரர்களுக்கு இடையே வாக்குவாதம், உரசல் போன்றவை இருந்து பரபரப்பாக இருந்தது.

அதிலும் டிரன்ட்பிரிட்ஜில் நடந்த ஆட்டத்தில் ஜாகீர் கானை ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக ஆடுகளத்தில் ஜெல்லி மிட்டாய்களை இங்கிலாந்து வீரர்கள் ஆடுகளத்தில் போட்டு அவரைக் கிண்டல் செய்தனர். இதனால், இங்கிலாந்து வீரர்களுடன் ஜாகீர் கான் வாக்குவாதம் செய்து உரசல் ஏற்பட்டது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர்களுக்குப் பதிலடி கொடுத்த ஜாகீர்கான், 5 விக்கெட்டுகள் வீழ்த்தி வெற்றி பெறவைத்தார்.

இரு அணி வீரர்களுக்கும் இந்தத் தொடர் முழுவதும் வாக்குவாதம், மோதல் இருந்தாலும், போட்டி மிகவும் உற்சாகமாக, தரமான போட்டியாக அமைந்தது. நாட்டிங்காமில் தோல்வியடைய இருந்த போட்டியில் டிரா செய்தோம். ஓவலில் நடந்த போட்டியில் கும்ப்ளே சதம் அடித்து, டிரா செய்தோம். அந்த நினைவுகளை மறக்க இயலாது.

10 ஆண்டு நினைவுகளோடு இங்கிலாந்து தொடரை எதிர்பார்த்துள்ளேன். உற்சாகமான பேச்சோடு, செயல்பாட்டுடன் இருக்கும் கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோரின் தலைமையில் தொடரை எதிர்கொள்கிறோம்.

இவ்வாறு தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x