Published : 01 Mar 2025 04:47 AM
Last Updated : 01 Mar 2025 04:47 AM
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் விதர்பா - கேரளா அணிகள் மோதி வருகின்றன. நாக்பூரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் விதர்பா அணி 379 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டேனிஷ் மாலேவர் 153 ரன்கள் விளாசினார். தொடர்ந்து விளையாடிய கேரளா அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 39 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. அக்சய் சந்திரன் 14, ரோகன் குன்னுமால் 0, அகமது இம்ரான் 37 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆதித்யா சர்வதே 66, கேப்டன் சச்சின் பேபி 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
நேற்று 3-வது நாள் ஆட்டத்தை கேரளா அணி தொடர்ந்து விளையாடியது. ஆதித்யா சர்வதே 185 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்ஷ் துபே பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய சல்மான் நிஷார் 21, முகமது அசாருதீன் 34 ரன்களில் வெளியேறினார். சதம் அடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட சச்சின் பேபி 235 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 98 ரன்கள் எடுத்த நிலையில் பார்த் ரேகாடே பந்தில் ஆட்டமிழந்தார்.
அப்போது ஸ்கோர் 324 ரன்களாக இருந்தது. கைவசம் 3 விக்கெட்கள் இருந்த நிலையில் மேற்கொண்டு 59 ரன்கள் சேர்த்தால் முன்னிலை பெறலாம் என்ற சூழ்நிலையில் கேரளா அணி எஞ்சிய 3 விக்கெட்களையும் விரைவாக இழந்தது. ஜலஜ் சக்சேனா 28, நிதீஷ் 1, ஈடன் ஆப்பிள் டாம் 1 ரன்னிலும் நடையை கட்டினர். இதனால் கேரளா அணி 125 ஓவர்களில் 342 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. விதர்பா அணி தரப்பில் தர்ஷன் நல்கண்டே, ஹர்ஷ் துபே, பார்த் ரேகாடே ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். 37 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள விதர்பா அணி 4-வது நாளான இன்று 2-வது இன்னிங்ஸை விளையாடுகிறது.
69 விக்கெட்கள் வீழ்த்தி ஹர்ஷ் துபே சாதனை: ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் கேரளா அணிக்கு எதிராக விதர்பா அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஹர்ஷ் துபே நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த சீசனில் மட்டும் இதுவரை ஹர்ஷ் துபே 69 விக்கெட்களை சாய்த்துள்ளார். இதன் மூலம் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஓர் சீசனில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் 22 வயதான ஹர்ஷ் துபே.
இதற்கு முன்னர் பிஹாரை சேர்ந்த அஷுதோஷ் அமான் 2018-19-ம் ஆண்டு சீசனில் 68 விக்கெட்கள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. இதை தற்போது முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார் ஹர்ஷ் துபே. அஷுதோஷ், ரஞ்சி கோப்பை தொடரின் பிளேட் குரூப் போட்டியில் சாதனை படைத்திருந்தார். ஆனால் ஹர்ஷ் துபே எலைட் குரூப் போட்டியில் அசத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT