Published : 28 Feb 2025 04:21 PM
Last Updated : 28 Feb 2025 04:21 PM
சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை எந்தவித களைப்பேற்படுத்தும் பயணமோ, பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைக்குத் தக்கவாறு தேர்வு செய்யப்பட வேண்டிய அணி என்ற தலைவலிகளோ இல்லாமல் ஒரு நிலையான அணியைத் தேர்வு செய்ய முடிவதோடு பயணக் களைப்பும் இல்லாமல் ஆட முடிவது அந்த அணிக்கு வழங்கப்பட்ட நியாயமற்ற சாதகம் என்று கடும் விமர்சனங்கள் எழுந்து வருவது நாம் அறிந்ததே.
ஆனால், இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் இந்த விமர்சனங்களை எழாமல் செய்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அதாவது துபாய், அபுதாபி, ஷார்ஜா என்று இந்திய அணி மூன்று யு.ஏ.இ.லேயே 3 வித்தியாசமான மைதானங்களில் ஆடி, இத்தகைய விமர்சனங்களை தவிர்த்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
“ஐசிசி இந்திய அணியை ஒரு போட்டியை ஷார்ஜாவிலும் ஒரு போட்டியை அபுதாபியிலும் ஒரு போட்டியை துபாயிலும் ஆடக் கேட்டிருக்கலாம். அப்படி செய்திருந்தால் பயணமும் இருந்திருக்கும் கண்டிஷன்களும் வேறு வேறாக இருந்திருக்கும் இன்று எழும் விமர்சனங்களைத் தவிர்த்திருக்கலாம். இந்திய அணி, பாகிஸ்தானுக்குச் செல்ல முடியாது என்பது தெரிவு, இது எல்லா அணிகளுக்கும் உண்டுதானே. ஆனால், இந்திய அணி அங்கு செல்லாததற்கு அரசியல் காரணங்கள் இருக்கின்றன.
பின் என்ன தெரிவு இருக்கிறது? இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தாக வேண்டும். எப்படி நடத்துவது? நடுநிலை மைதானங்களில்தான். அப்படி இருக்கையில் துபாயில் ஆடுவது பிரச்சினையில்லை, துபாயிலேயே ஆடுவதுதான் சிக்கல். அபுதாபி, ஷார்ஜா என்று பிரித்து விளையாடியிருந்தால் இன்று ‘நியாயமற்ற சாதகம்’ என்ற விமர்சனங்கள் வந்திருக்காது. இப்படித்தான் இந்த உரையாடலை மவுனப்படுத்தியிருக்க வேடும்” என்று வாசிம் ஜாஃபர் கூறினார்.
பாதுகாப்புக் காரணங்கள் கருதி இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட முடியாது என்று சொல்லி ‘நடுநிலை’ மைதானங்களில் ஆடுவது மிகச் சரியான முடிவுதான். ஆனால், துபாயில் மட்டுமே ஆடுவது என்பது ஒரு சமச்சீரற்ற சாதகப் பலன்களை இந்திய அணிக்கு வழங்குகிறது என்ற விமர்சனங்களையும் மறுப்பதற்கில்லை என்று கிரிக்கெட் வட்டாரங்களில் நிபுணர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனால், சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றிலேயே தொடரை நடத்தும் ஓர் அணி இத்தனை விரைவு கதியில் தொடரை விட்டு வீட்டுக்குப் போனதில்லை. மற்ற 7 நாடுகளும் பாகிஸ்தானில் ராவல்பிண்டி, கராச்சி, லாகூர் என்று 3 வித்தியாசமான மைதானங்களில் தங்கள் போட்டிகளை ஆடும்போது, இந்திய அணி மட்டும் துபாயில் மட்டுமே ஆடுவது, பிட்ச் உள்ளிட்ட கண்டிஷன்கள் மீதான சாதகப் பலன்களை இந்திய அணிக்குக் கூடுதலாகவே வழங்குகின்றது.
இந்திய அணி துபாயில் மட்டும் ஒரே மைதானத்தில் ஆடுவது ‘ஒரு நியாயமற்ற சாதக பலன்’ இருக்கிறது என்று இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் நாசர் ஹுசைன், மைக் ஆத்தர்டன் உள்ளிட்டோர் கூறியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT