Published : 25 Feb 2025 05:49 AM
Last Updated : 25 Feb 2025 05:49 AM
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்தது. அடுத்தடுத்து இரு தோல்விகளை சந்தித்துள்ளதால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏறக்குறைய இழந்துவிட்டது. பாகிஸ்தான் அணி தனது கடைசி ஆட்டத்தில் வரும் 27-ம் தேதி வங்கதேசத்துடன் விளையாடுகிறது.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னர் பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் கூறியதாவது:
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எங்களது பயணம் முடிந்துவிட்டது என்றே கூறுவோம். தற்போதைய நிலையில் மற்ற போட்டிகளின் முடிவுகளை நாங்கள் நம்பியிருக்க வேண்டும். இன்னும் ஒரு ஆட்டம் மீதமுள்ளதால் நம்பிக்கை உள்ளது. ஒரு கேப்டனாக, இந்த சூழ்நிலை எனக்குப் பிடிக்கவில்லை. எங்கள் விதி எங்கள் கையில் இருக்க வேண்டும்.
விராட் கோலியின் கடின உழைப்பைக் கண்டு நான் வியக்கிறேன். அவர், பார்மில் இல்லை என்று உலகமே சொன்னது, ஆனால் இவ்வளவு பெரிய போட்டியில் அவர், சிரமமின்றி ரன்களை குவித்தார். அவரது உடற்தகுதி, தொழில் முறை உண்மையில் பாராட்டத்தக்கது. அவரை ஆட்டமிழக்கச் செய்ய நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம், ஆனால் முடியவில்லை.
போட்டியைப் பொறுத்தவரை, நாங்கள் வெளிப்படையாக ஏமாற்றமடைகிறோம். நாங்கள் மூன்று துறைகளிலும் தவறு செய்தோம். மிடில் ஓவர்களில் எங்களால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. கடந்த 4 ஆட்டங்களிலும் செய்த அதே தவறை மீண்டும் செய்தோம். எங்கள் வேலையை செய்ய முயற்சித்தோம். அதற்கான உழைப்பை வழங்கினோம். ஆனால் எங்களைவிட இந்திய அணி அதிக முயற்சியை எடுத்தது. ஒருவேளை அவர்கள் எங்களைவிட தைரியமாக இருந்திருக்கலாம். பீல்டிங்கில் எங்களுக்கு கூடுதல் ஆற்றல் தேவைப்பட்டது.
தொடக்க வீரர்களான சைம் அயூப், ஃபகர் ஜமான் ஆகியோர் காயம் காரணமாக விலகி உள்ளது அணியில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நாங்கள் ஒரே ஒரு பிரதான சுழற்பந்து வீச்சாளருடன் மட்டுமே விளையாடினோம் என குறைகூற முடியாது. இந்திய அணியில் கூட குல்தீப் மட்டுமே பிரதான சுழற்பந்து வீச்சாளராக இருந்தார்.
ரவீந்திர ஜடேஜா ஆல்ரவுண்டர் போன்றவர், அக்சர் படேலுக்கும் இது பொருந்தும். சல்மான் அலி ஆகா வெளிநாடுகளில் சிறப்பாக பந்து வீசி உள்ளார். குஷ்தில் ஷா கடந்த காலங்களில் சிறப்பாக பந்து வீசி உள்ளார். நடு ஓவர்களில் விக்கெட்களை வீழ்த்தாவிட்டால், போட்டியில் வெற்றி பெற முடியாது. இவ்வாறு முகமது ரிஸ்வான் கூறினார்.
இன்றைய ஆட்டம்: ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா, இடம்: ராவல்பிண்டி, நேரம்: பிற்பகல் 2.30, நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ் 18
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT