Published : 11 Jul 2018 08:40 AM
Last Updated : 11 Jul 2018 08:40 AM

டிஎன்பிஎல் கிரிக்கெட் இன்று தொடக்கம்

டிஎன்பிஎல் தொடரின் 3-வது சீசன் போட்டிகள் திருநெல்வேலி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன மைதானத்தில் இன்று தொடங்குகின்றன.

ஐபிஎல் பாணியில் கடந்த 2016-ம் ஆண்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடர் அறிமுகம் செய்யப்பட்டது. முதல் ஆண்டில் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியும், அடுத்த ஆண்டில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியும் சாம்பியன் பட்டம் வென்றது. உள்ளூர் வீரர்களின் திறனை கண்டறியும் இந்தத் தொடரின் 3-வது சீசன் இன்று திருநெல்வேலியில் உள்ள சங்கர் நகர் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7.15 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக 6.10 மணிக்கு தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. சுமார் அரை மணி நேரம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பாடகர்களின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் மொத்தம் 32 போட்டிகள் நடைபெற உள்ளன. திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஆகிய இடங்களில் உள்ள மைதானங்களில் தலா 14 போட்டிகளும், சென்னையில் 4 போட்டிகளும் நடைபெற உள்ளன. இந்த சீசனில் பங்கேற்க உள்ள காரைக்குடி, மதுரை, தூத்துக்குடி அணிகளை புதிய உரிமையாளர்கள் வங்கியுள்ளனர். அந்த அணிகளின் பெயர்களும் முறையே ஐடிரீம் காரைக்குடி காளை, சீசெம் மதுரை பாந்தர்ஸ், ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட்ஸ் என மாற்றப்பட்டுள்ளன.

இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடியும், 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும் பரிசாக வழங்கப்படும். நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் 13-ம் தேதி ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. தொடரின் அனைத்து ஆட்டங்களையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் கூறும்போது, “இது தொடரின் ஆரம்பம் ஆகும், அனைத்தும் புதியதாகவும் வெளிப்படையாகவும் உள்ளன. மேலும், ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறேன், அணி மிகுந்த உற்சாகமான மனநிலையில் உள்ளது. ஆட்டத்தின் போக்கை நாங்கள் நிச்சயம் மாற்றுவோம். இளம் வீரர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்ட இத்தொடர் மிகச்சிறந்த களம் ஆகும். இத்தொடர் மூலம் உயர்ந்த இடத்துக்கு சென்ற வாஷிங்டன் சுந்தர், நாராயண் ஜெகதீசன் ஆகியோர் இத்தொடரின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு” என்றார்.

இன்றைய ஆட்டத்தில் மோதும் இரு அணி வீரர்களின் விவரம்:

திண்டுக்கல் டிராகன்ஸ்: அஸ்வின் (கேப்டன்), சதுர்வேத், ஹரி நிஷாந்த், அனிருத் சீதா ராம், மொகமது, ரோஹித், ஆதித்யா அருண், அபினவ், சிலம்பரசன், திரிலோக் நாக், யாழ் அருண் மொழி, சுஜேந்திரன், கவுசிக், ராமகிருஷ்ணன், அரவிந்த், நிவேதன் ராதாகிருஷ்ணன், வருண் எம்.தோத்தாரி.

திருச்சி வாரியர்ஸ்: பாபா இந்திரஜித் (கேப்டன்) சோனு யாதவ், சஞ்சய், முரளி விஜய், கணபதி, சுரேஷ் குமார், வசந்த் சரவணன், அரவிந்த், லக்ஷ்மி நாராயணன், விக்னேஷ், சந்திரசேகர், அஷ்வின் கிரைஸ்ட், மணி பாரதி, சரவண குமார், கோவிந்த ராஜன், ஆர்எஸ் திலக், ஆகாஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x