

கராச்சி: நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு 321 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து வீரர்கள் டாம் லேதம் மற்றும் வில் யங் ஆகியோர் சதம் கடந்தனர். கிளென் பிலிப்ஸ் அதிரடியாக ஆடி 61 ரன்கள் எடுத்தார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்று (பிப். 19) தொடங்கியது. மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் போட்டியை நடத்தும் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 2 பிரிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், நியூஸிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் உள்ளன.
இதில் ‘ஏ’ பிரிவில் உள்ள பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகள் இடையே தொடரின் முதல் போட்டி பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரத்தில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 320 ரன்கள் சேர்த்தது.
டேவன் கான்வே, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர் வில் யங் மற்றும் டாம் லேதம் இணைந்து 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மிடில் ஓவர்களை இந்த கூட்டணி திறம்பட விளையாடியது. வில் யங், 113 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த கிளென் பிலிப்ஸ் அதிரடியாக இன்னிங்ஸை அணுகினார். மறுமுனையில் டாம் லேதம் சதம் கடந்தார். 39 பந்துகளில் 61 ரன்கள் எடுத்த பிலிப்ஸ், கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். 4 சிக்ஸர்களை அவர் விளாசினார். 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 320 ரன்கள் எடுத்தது நியூஸிலாந்து. இறுதிவரை களத்தில் இருந்த டாம் லேதம், 104 பந்துகளில் 118 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்ஸின் கடைசி 10 ஓவர்களில் 113 ரன்களை எடுத்தது நியூஸிலாந்து என்பது கவனிக்கத்தக்கது.
தற்போது 321 ரன்களை பாகிஸ்தான் அணி விரட்டி வருகிறது. பாபர் அஸம், சவுத் ஷகீல் இணைந்து இன்னிங்ஸை தொடங்கியுள்ளனர். அண்மையில் தான் பாகிஸ்தான் அணி 353 ரன்கள் இலக்கை தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிகரமாக விரட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.