

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - பஞ்சாப் எஃப்சி மோதின. சென்னையின் எஃப்சி 4-4-2 என்ற பார்மட்டிலும், பஞ்சாப் எஃப்சி 4-2-3-1 என்ற பார்மட்டிலும் களமிறங்கின. 19-வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி வீரர் விஷ்ணு தட்சிணாமூர்த்தி த்ரோ செய்த பந்தை பாக்ஸ் பகுதிக்குள் சென்னையின் எஃப்சி வீரர் வில்மர் ஜோர்டான், பஞ்சாப் எஃப்சி அணியின் மெல்ராய் அசிசி ஆகியோர் கட்டுப்படுத்த முயன்றனர்.
அப்போது மெல்ராய் அசிசியின் கையில் பந்து பட்டது. இதனால் சென்னையின் எஃப்சி அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை வில்மர் ஜோர்டான் கில் கோலாக மாற்றி அசத்தினார். இதனால் சென்னையின் எஃப்சி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 34-வது நிமிடத்தில் கானர்ஷீல்ட்ஸ் அடித்த கிராஸை பெற்ற வில்மர் ஜோர்டான் கில் பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து தலையால் முட்டி கோல் அடிக்க முயன்றார். ஆனால் அவர், அடித்த பந்து கோல்கம்பத்தின் இடது கார்னரில் தடுக்கப்பட்டது. முதல் பாதி ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இந்தது.
2-வது பாதி ஆட்டத்தின் தொடக்கத்தில் பஞ்சாப் அணி கூடுதல் உத்வேகத்துடன் செயல்பட்டது. அந்த அணியின் வீரர் எசக்கியேல் விடால் பாக்ஸ் பகுதிக்குள் கட் செய்த கொடுத்த பந்தை லூக்கா மஜ்சென் பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து அடித்த ஷாட் கோல் வலையின் இடது கார்னரை துளைத்தது. இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது.
84-வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி அணியின் லூக்காஸ் பிரம்பில்லா, பஞ்சாப் எஃப்சி அணியின் இரு டிபன்டர்களுக்கு போக்குக்காட்டியபடி பந்தை பாக்ஸ் பகுதிக்குள் தட்டிவிட்டார். அதை நொடிப்பொழுதில் பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து கோல் வலைக்குள் திணித்தார் டேனில் சிமா சுக்வு. இதனால் சென்னையின் எஃப்சி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களின் முடிவில் சென்னையின் எஃப்சி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து காயங்களுக்கு இழப்பீடாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதில் பஞ்சாப் அணியின் கோல் அடிக்கும் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை.
முடிவில் சென்னையின் எஃப்சி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் அந்த அணி 4 ஆட்டங்களுக்குப் பிறகு தற்போதுதான் வெற்றியை வசப்படுத்தி உள்ளது.
சென்னையின் எஃப்சி அணிக்கு இது 6-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி 24 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் தொடர்கிறது. 21 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னையின் எஃப்சி 6 வெற்றி, 6 டிரா, 9 தோல்விகளை பதிவு செய்துள்ளது. பஞ்சாப் அணிக்கு இது 10-வது தோல்வியாக அமைந்தது. அந்த அணி 20 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 3 டிரா, 10 தோல்விகளுடன் 24 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் தொடர்கிறது.