

அகமதாபாத்: இந்திய கிரிக்கெட் அணியுடனான ஒருநாள் தொடரை நாங்கள் 0-3 என்ற கணக்கில் இழந்தாலும் எங்களுக்கு அதில் கவலை இல்லை. எங்களது கவனம் அனைத்தும் சாம்பியன்ஸ் டிராபி பட்டம் வெல்வதில் உள்ளது என இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் டக்கெட் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. அந்த அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரை இழந்துள்ளது. இந்த தொடரின் கடைசி ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது.
“சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல வேண்டும் என்ற இலக்குடன் நாங்கள் இங்கு வந்துள்ளோம். எங்களால் அது முடியும் என நாங்கள் நம்புகிறோம். அது முற்றிலும் மாறுபட்ட சூழலாக இருக்கும். பல்வேறு அணிகளுடன் நாங்கள் விளையாட வேண்டி உள்ளது. இந்திய அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 0-3 என்ற கணக்கில் நாங்கள் இழந்தாலும் அதில் கவலை இல்லை. நாங்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்துவோம்.
அதை நாங்கள் செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. சரியான நேரத்தில் வெற்றிப்பாதைக்கு திரும்புவோம். இந்திய அணிக்கு எதிரான தொடரில் சில போட்டிகளில் நாங்கள் வெற்றியை நெருங்கி வந்தோம். பாகிஸ்தானில் லேண்ட் ஆனதும் எங்களுக்கு கிடைக்கும் ரிசல்ட் வேறாக இருக்கும்” என இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் கூறியுள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன.