

நாக்பூர்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு - விதர்பா அணிகள் இடையிலான கால் இறுதி ஆட்டம் நாக்பூரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட் செய்த விதர்பா அணி 44 ரன்களுக்கு 3 விக்கெட்களை பறிகொடுத்தது. அதர்வா டைடே 0, துருவ் ஷோரே 26, ஆதித்யா தாக்ரே 5 ரன்களில் நடையை கட்டினர். 4-வது விக்கெட்டுக்கு தனிஷ் மலேவாருடன் இணைந்த கருண் நாயர் பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார்.
இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்தது. நிதானமாக விளையாடிய தனிஷ் மலேவார் 119 பந்துகளில், 13 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் சேர்த்த நிலையில் விஜய் சங்கர் பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் நங்கூரமிட்டு விளையாடிய கருண் நாயர் சதம் விளாசினார். இது அவருக்கு முதல்தர கிரிக்கெட்டில் 22-வது சதமாக அமைந்தது.
முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் விதர்பா அணி 89 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. கருண் நாயர் 180 பந்துகளில், ஒரு சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 100 ரன்களும், ஹர்ஷ் துபே 19 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
தமிழக அணி தரப்பில் விஜய் சங்கர் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். முகமமுது, சோனு யாதவ், அஜித் ராம், முகமது அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். கைவசம் 4 விக்கெட்கள் இருக்க விதர்பா அணி 2-வது நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்து விளையாடுகிறது.