

லாகூர்: பாகிஸ்தான், நியூஸிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானை 78 ரன்களில் வென்றது நியூஸிலாந்து.
லாகூரில் உள்ள கடாபி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி சனிக்கிழமை (பிப்.8) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்தது. கிளென் பிலிப்ஸ் 74 பந்துகளில் 106 ரன்கள் சேர்த்தார். முதல் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் சதம் விளாசினார் பிலிப்ஸ். ஒருநாள் கிரிக்கெட்டில் இது அவர் பதிவு செய்துள்ள முதல் சதம். அவர் ஆறாவது பேட்ஸ்மேனாக களம் கண்டு விளையாடி இருந்தார்.
நியூஸிலாந்து அணியின் மற்ற பேட்ஸ்மேன்களில் மிட்செல் 81 ரன்கள், கேன் வில்லியம்சன் 58 ரன்கள் மற்றும் பிரேஸ்வெல் 31 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகள், அப்ரார் 2 மற்றும் ஹாரிஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் விரட்டியது.
ஃபகர் ஜமான் மற்றும் பாபர் அஸம் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். பாபர் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். ஃபகர் ஜமான் 69 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். சல்மான் அகா 40 ரன்கள், தாஹிர் 30 ரன்கள், அப்ரார் 23 ரன்கள் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 47.5 ஓவர்களில் 252 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது பாகிஸ்தான். இரண்டாவது இன்னிங்சில் ஹாரிஸ் விளையாடாமல் ரிட்டையர்ட் அவுட் கொடுத்தார். இதன் மூலம் 78 ரன்களில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை கிளென் பிலிப்ஸ் பெற்றார். அவர் சதம் விளாசியதோடு 1 விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தார். அபார கேட்ச் ஒன்றை பிடித்து பாபர் அஸமை அவர் வெளியேற்றினார். இந்த தொடரின் அடுத்தப் போட்டி வரும் 10-ம் தேதி அன்று நியூஸிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடுகின்றன.