ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி சதம் விளாசல்: ஆஸ்திரேலிய அணி 330 ரன் குவித்து முன்னிலை

ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி சதம் விளாசல்: ஆஸ்திரேலிய அணி 330 ரன் குவித்து முன்னிலை
Updated on
1 min read

இலங்கை - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. திமுத் கருணரத்னே 36, பதும் நிஷங்கா 11, தினேஷ் சந்திமால் 74, ஏஞ்சலோ மேத்யூஸ் 1, கமிந்து மெண்டிஸ் 13, தனஞ்ஜெயா டி சில்வா 0, பிரபாத் ஜெயசூர்யா 0, நிஷார் பெரிஸ் 0, ரமேஷ் மெண்டிஸ் 28 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

குஷால் மெண்டிஸ் 59, லகிரு குமரா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 97.4 ஓவர்களில் 257 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. லகிரு குமரா 2 ரன்களில் மேத்யூ குஹ்னேமன் வெளியேறினார். குஷால் மெண்டிஸ் 85 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் நேதன் லயன், மிட்செல் ஸ்டார்க், மேத்யூ குஹ்னேமன் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி தொடக்க விக்கெட்களை விரைவாக இழந்தது. டிராவிஸ் ஹெட் 21, உஸ்மான் கவாஜா 36 ரன்களில்

நிஷார் பெரிஸ் பந்தில் ஆட்டமிழந்தனர். மார்னஷ் லபுஷேன் 4 ரன்னில் பிரபாத் ஜெயசூர்யா பந்தில் நடையை கட்டினார். எனினும் 4-வது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி ஜோடி அற்புதமாக விளையாடி பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தது. நிதானமாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 191 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இது அவருக்கு 36-வது சதமாக அமைந்தது.

மறுபுறம் அதிரடியாக விளையாடிய அலெக்ஸ் கேரி 118 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் தனது 2-வது சதத்தை விளாசினார். 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 80 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 330 ரன்கள் குவித்திருந்தது. ஸ்டீவ் ஸ்மித் 120, அலெக்ஸ் கேரி 139 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கைவசம் 7 விக்கெட்கள் இருக்க 73 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in