2-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடுவார்: துணை கேப்டன் ஷுப்மன் கில் நம்பிக்கை

2-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடுவார்: துணை கேப்டன் ஷுப்மன் கில் நம்பிக்கை
Updated on
1 min read

விராட் கோலியின் உடற்தகுதி குறித்த அச்சங்களை இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனான ஷுப்மன் கில் நீக்கியுள்ளார். விராட் கோலி நன்றாக இருப்பதாகவும், ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முழு உடற்தகுதியை அடைந்துவிடுவார் எனவும் கூறியுள்ளார்.

36 வயதான விராட் கோலி, நாக்பூரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் காயம் காரணமாக களமிறக்கப்படவில்லை. அவரது வலது முழங்காலில் வீக்கம் இருந்ததால் விளையாடவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் விராட் கோலியின் காயம் கவலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டனான ஷுப்மன் கில் கூறும்போது, “விராட் கோலிக்கு பயப்படும்படியான அளவுக்கு காயம் இல்லை. பயிற்சின் போது நன்றாகவே இருந்தார். ஆனால் போட்டியன்று காலை அவருக்கு முழங்காலில் வீக்கம் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாகவே அவரால் விளையாட முடியாமல் போனது. அவர், கண்டிப்பாக 2-வது ஒருநாள் போட்டிக்கு திரும்புவார்” என்றார்.

ஷுப்மன் கில் மேலும் கூறும்போது, “நான் சதம் அடிப்பது குறித்து சிந்திக்கவில்லை. பீல்டிங்கிற்கு தகுந்தவாறு எனது ஷாட்களை மேற்கொண்டு ரன்கள் சேர்த்தேன். பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த விரும்பினேன். 3-வது இடத்தில் விளையாடுவது எப்போதும் சவால்தான். ஏனென்றால் நிலைமைக்கு தகுந்தவாறு விளையாட வேண்டும். அணி விரைவாக விக்கெட்டுகளை இழந்தால், விவேகத்துடன் விளையாட வேண்டும்.

அதேவேளையில் சிறந்த தொடக்கம் கிடைத்திருந்தால் அந்த வேகத்தை எடுத்துச் செல்ல வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவதுதான் எனது அணுகுமுறை. நாங்கள் தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்தோம், ஆனால் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவதே திட்டம், பின்வாங்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். சில ஓவர்களுக்குப் பிறகு, லைன் அண்ட் லென்த் கணிக்கக்கூடியதாக மாறியது, இது எங்களுக்கு வேகமாக ஸ்கோர் செய்ய உதவியது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in