Published : 15 Jul 2018 02:44 PM
Last Updated : 15 Jul 2018 02:44 PM

இதுதான் தோனி..ஒரேநாளில் இத்தனை சாதனைகளா?

 

பினிஷிங் மன்னன் என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி, இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியின் போது இரு முக்கிய சாதனைகளைச் செய்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 500 போட்டிகள் வரை விளையாடிய இந்திய வீரர் எனும் பெருமையைக் கடந்த வாரம் அடைந்த தோனி, இப்போது விக்கெட் கீப்பிங்கிலும், ரன் குவிப்பிலும் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த 2-வது ஒருநாள் போட்டியின் போது, இந்திய 86 ரன்களில் தோல்வி அடைந்தது. இதனால் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒருவெற்றியுடன் 1-1 என்று சமநிலையில் உள்ளன.

ஆனால், இந்தப் போட்டியில் தோனி, 33 ரன்கள் எட்டியபோது, சர்வதேச ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை எட்டிய 4-வது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

அதுமட்டுமல்லாமல், ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த 2-வது விக்கெட் கீப்பர் என்ற சாதனையைச் செய்தார். இதற்கு முன் இலங்கை விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான சங்கக்கரா (13,341) மட்டுமே 10 ஆயிரம் ரன்களைக் கடந்திருந்தார். அவருக்கு அடுத்தாற்போல் இப்போது 2-வது வீரராக தோனி இணைந்தார்.

ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி வீரர்களில் இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர்(18,426) , கங்குலி (11,323), டிராவிட் (10,899) ஆகியோர் மட்டுமே 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் சேர்த்திருந்தனர். இப்போது, 4-வது இந்திய வீரராக தோனியும் இணைந்தார்.

அதிலும் குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை மிகவிரைவாக எட்டிய (273 இன்னிங்ஸ்) முதல் வீரர் என்ற பெருமையும், இந்திய அளவில் 10 ஆயிரம் ரன்களை விரைவாக எட்டிய 3-வது வீரர் எனும் பெருமையையும் தோனி செய்தார்.

இதற்கு முன் 10 ஆயிரம் ரன்களை சச்சின் (259 போட்டி), கங்குலி (263)போட்டிகளில் எடுத்திருந்தனர். தோனி, 273 இன்னிங்ஸ்களில் மைல்கல்லை அடைந்தார்.

மேலும், ஒருநாள் போட்டிகளில் 300 கேட்சுகளுக்கு மேல் பிடித்த 4-வது விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும், 300 கேட்சுகளுக்கு மேல் பிடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் தோனி படைத்தார்.

குல்தீப் வீசிய ஓவரில் ஜோஸ்பட்லரை கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தபோது, தோனி 300-வது கேட்ச் பிடித்து இந்த சாதனையைச் செய்தார்.

அதுமட்டுமல்லாமல், ஒரு நாள் போட்டிகளில் 300 கேட்சுகளையும், 100 ஸ்டெம்பிங்குகளையும் தோனி மட்டுமே செய்துள்ளார். இதுவரை எந்தச் சர்வதேச வீரரும் இந்த சாதனையைச் செய்யவில்லை.

இதற்கு முன் 300 கேட்சுகளுக்கு மேல், ஆஸ்திரலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் (417), தென் ஆப்பிரிக்க வீரர் மார்க் பவுச்சர் (402), இலங்கை வீரர் குமார சங்கக்கரா (383) ஆகியோர் மட்டுமே பிடித்திருந்தனர்.

“மக்களின் வலிகளையும் சந்தோஷத்தையும் பாடுவதற்குத்தான் நாங்க இருக்கோம்” - செந்தில் கணேஷ் பேட்டி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x