

புதுடெல்லி: டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப்-1 சுற்றுப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் இந்தியா, டோகோ அணிகள் மோதி வருகின்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த், ராம்குமார் ராமநாதன் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதையடுத்து இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராம் பாலாஜி-ரித்விக் சவுத்ரி போலிப்பல்லி ஜோடி, டோகோ நாட்டின் எம்லாப்பா டிங்கோவ் அகோமோலா, ஹாடோபலோ இஸாக் படியோ ஜோடியை 6-2, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தியது. இந்தப் போட்டி 57 நிமிடங்களில் முடிவடைந்தது. இதன்மூலம் இந்திய அணி 3-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப்-1 சுற்றுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.