

காலே: இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 330 ரன்கள் குவித்தது. உஸ்மான் கவாஜா, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சதம் விளாசினர்.
இலங்கையின் காலே நகரில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களான உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடினார்கள். 40 பந்துகளில், ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்த நிலையில் பிரபாத் ஜெயசூர்யா பந்தில் டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 14.3 ஓவர்களில் 92 ரன்கள் குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய மார்னஷ் லபுஷேன் 20 ரன்களில் ஜெப்ரி வான்டர்சே பந்தில் வெளியேறினார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித், கவாஜாவுடன் இணைந்து ரன் வேட்டையாடினார். உஸ்மான் கவாஜா 135 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் தனது 16-வது சதத்தையும், ஸ்டீவ் ஸ்மித் 179 பந்துகளில், ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் தனது 35-வது சதத்தையும் விளாசினர்.
முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 81.1 ஓவரில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்தது. உஸ்மான் கவாஜா 147, ஸ்டீவ் ஸ்மித் 104 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
‘ஸ்மித் 10 ஆயிரம்’: காலே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஒரு ரன்னை எடுத்த போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் மைல் கல்லை எட்டினார். இந்த சாதனையை நிகழ்த்திய 4-வது ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் ஆவார். இதற்கு முன்னர் ஆலன் பார்டர், ஸ்டீவ் வாஹ், ரிக்கி பாண்டிங் ஆகியோரும் 10 ஆயிரம் ரன்கள் மைல்கல்லை எட்டியிருந்தனர்.