3-வது டி20 ஆட்டத்தில் தோல்வி ஏன்? - கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கம்

3-வது டி20 ஆட்டத்தில் தோல்வி ஏன்? - கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கம்
Updated on
1 min read

ராஜ்கோட்: இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் ராஜ்கோட்டில் நடைபெற்ற 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 172 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணியால் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. நடுவரிசையில் ஹர்திக் பாண்டியா 35 பந்துகளில், 40 ரன்களும், அக்சர் படேல் 16 பந்துகளில், 15 ரன்களும் சேர்த்தனர்.

இதில் ஹர்திக் பாண்டியா மந்த கதியில் ரன்கள் சேர்த்ததே தோல்விக்கான காரணங்களில் முக்கியமானதாக அமைந்தது. ஒரு கடத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி 4 ஓவர்களில் 64 ரன்கள் தேவையாக இருந்தது. ஆனால் ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் ஜோடியிடம் இருந்து பெரிய அளவிலான ஷாட்கள் வெளிப்படவில்லை.

இங்கிலாந்து அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை உயிர்ப்பிப்புடன் வைத்துள்ளது. தொடரில் அந்த அணி 1-2 என பின்தங்கியுள்ளது. ராஜ்கோட் போட்டியில் அந்த வெற்றி பெற்றதில் ஆதில் ரஷீத் சுழற்பந்து வீச்சு முக்கிய பங்கு வகித்தது. அவர், 4 ஓவர்களை வீசி 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றியிருந்தார்.

தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறும்போது,“இலக்கை துரத்தும் போது பனிப்பொழிவு இருக்கும் என நினைத்தேன். ஆனால் அது நிகழவில்லை. ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் களத்தில் இருந்த போது ஆட்டங்கள் எங்கள் கையில்தான் இருந்தது. ஆதில் ரஷீத்தை பாராட்டியாக வேண்டும். நாங்கள் ஸ்டிரைக் ரொட்டேட் செய்ய வேண்டிய நிலையில், அதை ஆதில் ரஷீத் செய்யவிடவில்லை. அதனால்தான் அவர், உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளராக இருக்கிறார்.

டி20 போட்டியில் நாங்கள் எப்போதும் கற்றுக்கொள்வோம். இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 127 ரன்களே எடுத்திருந்தது. ஆனால் அங்கிருந்து 170 ரன்களுக்கு மேல் சேர்க்கவிட்டுவிட்டோம். இது மிகவும் அதிகம். பேட்டிங்கிலும் கற்றுக்கொள்ள சில விஷயங்கள் உள்ளன. முகமது ஷமி திரும்பி வந்து பந்து வீசுவதைப் பார்க்க நன்றாக இருக்கிறது. வருண் சக்கரவர்த்தி கடினமாக உழைக்கிறார். அதற்கான பலன்கள் களத்தில் கிடைக்கின்றன” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in