

சேலம்: ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் தமிழக அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் சண்டிகர் அணியை வீழ்த்தியது.
சேலம் எஸ்சிஎஃப் மைதானத்தில் நடைபெற்ற ரஞ்சி டிராபி குரூப் டி போட்டியில் தமிழ்நாடு, சேலம் அணிகள் மோதின. முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 301 ரன்களும், சண்டிகர் அணி 204 ரன்களும் எடுத்தன. இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய தமிழக அணி 5 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து 403 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சண்டிகர் அணி 2-வது இன்னிங்ஸை விளையாடியது. 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் சண்டிகர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 4-வது நாள் ஆட்டத்தை அந்த அணி தொடர்ந்து விளையாடியது. ஆனால் தமிழக அணியின் சிறப்பான பந்து வீச்சால் அந்த அணி 50 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து தமிழக அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சண்டிகர் அணியின் மனன் வோரா மட்டும் 100 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தமிழக அணியின் சார்பில் சாய் கிஷோர், அஜித் ராம் ஆகியோர் தலா 4 விக்கெட்களைக் கைப்பற்றினர். எம். முகமது ஒரு விக்கெட்டை சாய்த்தார்.