

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகளில் வெற்றி. திலக் வர்மா 55 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் இரண்டாவது போட்டி சனிக்கிழமை (ஜன.25) அன்று சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த தொடரில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது.
சேப்பாக்கத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பந்து வீச முடிவு செய்தார். முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கேப்டன் பட்லர் அதிகபட்சமாக 30 பந்துகளில் 45 ரன்களை சேர்த்தார்.
166 ரன்கள் ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. சீரான இடைவெளியில் இந்தியா விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் திலக் வர்மா களத்தில் பொறுப்புடன் ஆடினார். 55 பந்துகளில் 72 ரன்கள் எடுத்த அணியை வெற்றி பெற செய்தார். வாஷிங்டன் சுந்தர், 19 பந்துகளில் 26 ரன்களை சேர்த்தார்.
கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட 2 மற்றும் 4 (பவுண்டரி) விளாசி அணியை வெற்றி தேடி தந்தார். இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை அவர் வென்றார். இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. தொடரின் அடுத்தப் போட்டி வரும் 28-ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.