Published : 23 Aug 2014 05:24 PM
Last Updated : 23 Aug 2014 05:24 PM

திருப்பிக் கொடுக்க வேண்டிய நேரம்: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் பற்றி சுரேஷ் ரெய்னா

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தன்னம்பிக்கையுடன் போராடி திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

பிசிசிஐ.டிவி இணையதளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

வங்கதேச ஒருநாள் தொடர் முடிந்தவுடன் டெல்லி, லக்னோவில் பயிற்சி மேற்கொண்டேன். மும்பையில் பந்த்ரா குர்லாவில் சிறப்புப் பயிற்சிக்காக சென்றிருந்தேன்.

அங்குதான் சச்சின் டெண்டுல்கரைச் சந்தித்தேன், அர்ஜுன் டெண்டுல்கர் அங்குதான் வலைப்பயிற்சி செய்து வருகிறார். அப்போது சச்சின் எனக்கு சில அறிவுரைகளை வழங்கினார். இங்கிலாந்தில் எப்படி ஆடினால் பரிமளிக்க முடியும் என்று நான் அவரிடம் கேட்டேன். அவர் சில ஆலோசனைகளை வழங்கினார். அதேபோல் பிரவீண் ஆம்ரேயிடமும் நீண்ட நேரம் பேட்டிங் உத்திகள் பற்றி விவாதித்தேன்.

இங்கிலாந்து ஸ்விங் பந்துகளை எதிர்கொள்ள டேப் சுற்றிய டென்னிஸ் பந்தில் பந்து வீசச் செய்து பேட்டிங் பயிற்சி மேற்கொண்டேன்.

இந்திய அணி கடினமான காலக்கட்டத்தில் உள்ளது. இப்போதுதான் சிறந்த குணாம்சத்தை நாம் வெளிப்படுத்த வேண்டும். இதுபோன்ற தோல்விகளிலிருந்து மீள்வது கடினம்தான், ஆனாலும் மீண்டு வந்து நிரூபித்துதான் ஆகவேண்டும். போராட்டக் குணத்தைக் கொண்டு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

6ஆம் நிலையில் நான் களமிறங்கினாலும் இருமுனைகளிலும் வெவ்வேறு பந்துகள் என்ற புதிய விதிமுறை வந்த பிறகு புதிய பந்தை எதிர்கொள்வது போல்தான் எதிர்கொள்ள நேரிடுகிறது.

பவர் பிளே மிக முக்கியமான கட்டமாகும். அப்போதுதான் எல்லாப் பந்துகளையும் அடிக்கச் சென்று விக்கெட்டுகளை மடமடவென இழக்க நேரிடுகிறது. யாராவது ஒரு செட்டில் ஆன பேட்ஸ்மென் பவர் பிளேயின் போது பேட்டிங் கிரீசில் இருப்பது அவசியம்.

இங்கிலாந்தில் பேட் செய்வது பற்றி சவ்ரவ் கங்குலியிடமும் விவாதித்துள்ளேன்.

இவ்வாறு அந்தப் பேட்டியில் கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x