Published : 23 Jan 2025 08:14 AM
Last Updated : 23 Jan 2025 08:14 AM

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜன்னிக் சின்னர், இகா ஸ்வியாடெக் அரை இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

இகா ஸ்வியாடெக்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஜன்னிக் சின்னர், பென் ஷெல்டன், இகா ஸ்வியாடெக், மேடிசன் கீஸ் ஆகியோர் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 11-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீரருமான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 8-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார். இதில் ஜன்னிக் சின்னர் 6-3, 6-2, 6-00 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

அரை இறுதியில் ஜன்னிக் சின்னர், 21-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பென் ஷெல்டனுடன் மோதுகிறார். பென் ஷெல்டன் கால் இறுதி சுற்றில், 55-ம் நிலை வீரரான இத்தாலியின் லோரென்சோ சோனேகோவை எதிர்த்து விளையாடினார். 3 மணி நேரம் 50 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பென் ஷெல்டன் 6-4, 7-5, 4-6, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 19-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கீஸ், 28-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை எதிர்கொண்டார். இதில் மேடிசன் கீஸ் 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றில் கால்பதித்தார்.

2-ம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 8-ம் நிலை விராங்கனையான அமெரிக்காவின் எம்மா நவர்ரோவுடன் மோதினார். இதில் இகா ஸ்வியாடெக் 6-1, 6-2 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அரை இறுதி சுற்றில் இகா ஸ்வியாடெக், மேடிசன் கீஸுடன் மோதுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x