‘ரோஹித் சர்மாவுக்கு யாரும் எதுவும் சொல்ல வேண்டியதில்லை’ - ரஹானே

‘ரோஹித் சர்மாவுக்கு யாரும் எதுவும் சொல்ல வேண்டியதில்லை’ - ரஹானே
Updated on
1 min read

மும்பை: ரோஹித் சர்மா என்ன செய்ய வேண்டும் என்று யாரும் எதுவும் சொல்ல வேண்டியதில்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே தெரிவித்துள்ளார்.

நடப்பு ரஞ்சி கோப்பை தொடரில் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக ரோஹித் சர்மா விளையாடுகிறார். இதற்காக அவர் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த போட்டி நாளை தொடங்குகிறது. இந்த சூழலில் அது குறித்து மும்பை அணியின் கேப்டன் ரஹானே பேசியுள்ளார்.

“பல ஆண்டுகளுக்கு பிறகு மும்பை அணிக்காக ரோஹித் மீண்டும் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இளம் வீரர்கள் அனைவரும் அவரிடமிருந்து ஆட்ட நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பாக இது அமைந்துள்ளது. நானும் அவரும் பல ஆண்டுகளாக உள்ளூர் மற்றும் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடி உள்ளோம். அவர் சொல்லும் கருத்துகள் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

அவர் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் அவருக்குச் சொல்ல வேண்டியதில்லை. அவரது ஆட்டத்தை அவர் நன்கு அறிவார். அவர் சிறப்பாகச் செயல்படுவார் என்று நான் நம்புகிறேன். அணிக்கு ஜெய்ஸ்வால் திரும்பி உள்ளதும் மகிழ்ச்சி அளிக்கிறது” என ரஹானே தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து இந்திய வீரர்களும் உள்ளூர் தொடர்களில் விளையாட வேண்டும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இதன் காரணமாக ரோஹித் சர்மா, பார்மை மீட்டெடுக்கும் விதமாக ரஞ்சி கோப்பையில் களமிறங்குகிறார். அவரை போலவே ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் ரஞ்சியில் விளையாடுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in