இளம் வீரர் அல்கராஸை கால் இறுதியில் வீழ்த்தினார் ஜோகோவிச் | ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்

ஜோகோவிச்
ஜோகோவிச்
Updated on
1 min read

மெல்பர்ன்: நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸை வீழ்த்தினார் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது அதன் முக்கிய கட்டத்தை நெருங்கி உள்ளது.

இந்த சூழலில் கால் இறுதி ஆட்டத்தில் அடுத்த தலைமுறை வீரரான 21 வயது அல்கராஸை 4-6, 6-4, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியுள்ளார் 37 வயதான ஜோகோவிச். இந்த ஆட்டம் சுமார் 3 மணி நேரம் 37 நிமிடங்கள் நடைபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 12-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் அரை இறுதிக்கு ஜோகோவிச் முன்னேறியுள்ளார்.

அரை இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவை ஜோகோவிச் எதிர்கொள்கிறார். “அல்கராஸ் அற்புதமான வீரர். இன்று ஆடிய இந்த ஆட்டமே இறுதிப் போட்டியாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். நான் விளையாடியதில் இது மிகவும் முக்கியமான போட்டி என நான் கருதுகிறேன்.

இப்போது ஸ்வெரேவ் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த ஆட்டம் அவரை எதிர்கொள்வதற்கான மீட்சியாக இருக்கும் என நான் நினைக்கிறேன்” என ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.

அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்போடு இருக்கிறார். 11-வது முறையாக ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்லும் நோக்கில் ஜோகோவிச் களமாடுகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in