

கேப்டவுன்: பெட்வே எஸ்ஏ20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் இலக்கை வெற்றிகரமாக துரத்தியது.
தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் - ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. கேப்டன் ஃபாப் டு பிளெசிஸ் 38 பந்துகளில் 61 ரன்கள் (6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) விளாசினார். டேவன் கான்வே 31 பந்துகளில், 35 ரன்கள் சேர்த்தார். ஜானி பேர்ஸ்டோ 27 பந்துகளில் 43 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
173 ரன்கள் இலக்குடன் பேட் செய்த எம்ஐ கேப்டவுன் அணிக்கு ரியான் ரிக்கெல்டன், ராஸ்ஸி வான் டெர் டசென் ஜோடி அற்புதமான தொடக்கம் கொடுத்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 6.4 ஓவர்களில் 70 ரன்கள் குவித்தது. ராசி வான் டெர் டசென் 24 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். ரியான் ரிக்கெல்டன் 39 பந்துகளில், 89 ரன்கள் (8 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) விளாசி ஆட்டமிழந்தார்.
2-வது விக்கெட்டுக்கு ரியான் ரிக்கெல்டன், ஹென்ட்ரிக்ஸ் ஜோடி 49 பந்துகளில், 92 ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடியின் அபாரமான ஆட்டத்தால் எம்ஐ கேப்டவுன் அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் போனஸ் புள்ளியையும் தன்வசப்படுத்தியது. ஹென்ட்ரிக்ஸ் 34 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.