

மும்பை: அணிக்காக பேட்டிங் ஆர்டரில் எந்த இடத்திலும் பேட் செய்ய தான் தயாராக இருப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் இடம் பெற்றால் அது தனக்கு பெருமை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த வார இறுதியில் பிசிசிஐ, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியை அறிவிக்க உள்ளது. கடந்த 2023 உலகக் கோப்பை தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்த ஸ்ரேயாஸ் ஐயர் இந்த தொடருக்கான அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவரும் இதை ஆவலோடு எதிர்பார்த்து உள்ளார்.
“அணிக்காக பேட்டிங் ஆர்டரில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் நான் விளையாட தயாராக உள்ளேன். 2023 உலகக் கோப்பை தொடரில் நானும், கே.எல்.ராகுலும் மிடில் ஆர்டரில் அணிக்காக சிறந்த பங்களிப்பை அளித்தோம். இறுதிப் போட்டியில் நாங்கள் எதிர்பார்த்த வகையில் எங்களால் செயல்பட முடியாமல் போனது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தேசத்துக்காக விளையாடுவது எனக்கு பெருமைமிகு தருணம்” என அவர் கூறியுள்ளார்.
30 வயதான அவர், கடந்த 2017 முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். 62 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2,421 ரன்கள் எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 47.47. 5 சதங்கள் மற்றும் 18 அரை சதங்கள் பதிவு செய்துள்ளார். நடப்பு விஜய் ஹசாரே டிராபி தொடரில் கடைசியாக விளையாடிய 5 இன்னிங்ஸில் இரண்டு சதம் விளாசி உள்ளார். எதிர்வரும் ஐபிஎல் 2025 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியை அவர் கேப்டனாக வழிநடத்த உள்ளார்.