கம்பீர் பயிற்சியின் கீழ் இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடு: ஒரு டைம்லைன் பார்வை

கவுதம் கம்பீர்
கவுதம் கம்பீர்
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. இதன் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளது இந்தியா. இந்நிலையில், அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீரின் பயிற்சியின் கீழ் அணியின் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமித்தது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இந்திய கிரிக்கெட் அணியை டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வெல்ல வைத்த நிலையில் ராகுல் திராவிட் விடைபெற்றார். அதனால் கம்பீர் மீது மிகுந்த எதிர்பார்ப்பும் இருந்தது. அதே நேரத்தில் இந்த ரோலுக்கு அவர் சரி வருவாரா? என்ற விமர்சனங்களும் வைக்கப்பட்டன.

கவுதம் கம்பீர் பயிற்சியில் இந்திய அணியின் செயல்பாடு எப்படி? - கம்பீர் பயிற்சியின் கீழ் 10 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாடி உள்ளது. இதில் 3 வெற்றி, 1 டிரா மற்றும் 6 தோல்வியை தழுவி உள்ளது. சொந்த மண்ணில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக 1-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது. வங்கதேச அணிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது.

ஒருநாள் கிரிக்கெட் பார்மெட்டை பொறுத்தவரையில் 3 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி கூட இந்தியா பெறவில்லை. ஒரு போட்டி சமனில் முடிந்தது. இலங்கையில் அந்த நாட்டு அணி உடனான 3 போட்டிகள் கொண்ட தொடரை 0-2 என இழந்தது.

டி20 பார்மெட்டை பொறுத்த வரையில் கம்பீர் பயிற்சியின் கீழ் இந்திய அணி 6 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை மற்றும் வங்கதேச அணிக்கு எதிராக தலா 3 போட்டிகள் விளையாடி இந்தியா வெற்றி பெற்றது.

எதிர்வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 போன்றவற்றை கருத்தில் கொண்டு பிசிசிஐ நல்ல முடிவை எடுக்க வேண்டியது அவசியமாகி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in