

ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று தொடங்குகிறது.
134-வது ஆண்டாக நடைபெறும் இந்தப் போட்டி செப்டம்பர் 8-ம் தேதி நிறைவடைகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவைப் பொறுத்த வரையில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் ரஃபேல் நடால் காயம் காரணமாக விலகிவிட்டார். இதனால் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 3-ம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் ஆகியோர் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ளது.
ஜோகோவிச் தனது காலிறுதியில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே அல்லது பிரான்ஸின் சோங்காவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு பிரிவு டிராவைப் பொறுத்தவரையில் காலிறுதியில் ஃபெடரரும், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவும் மோத வாய்ப்புள்ளது. ஃபெடரர் தனது அரையிறுதியில் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச் அல்லது ஸ்பெயினின் டேவிட் ஃபெரரை சந்திக்க வாய்ப்புள்ளது.
ஃபெடரர் தனது முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் மரின்கோவை சந்திக்கிறார். 2004 முதல் 2008 வரை தொடர்ந்து 5 முறை அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற ரோஜர் ஃபெடரர், அதன்பிறகு இதுவரை பட்டம் வெல்லவில்லை. 2012-க்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பட்டம் வெல்லாத ஃபெடரர், அமெரிக்க ஓபனில் சாம்பியனாவதில் தீவிரமாக உள்ளார். இதில் சாம்பியனாகும் பட்சத்தில் அவர் வென்ற 18-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக இது அமையும்.
செரீனாவுக்கு வாய்ப்பு
மகளிர் பிரிவைப் பொறுத்த வரையில் ருமேனியாவின் சைமோனோ ஹேலப், ரஷ்யாவின் மரியா ஷரபோவா, பெலாரஸின் விக்டோரியா அசரென்கா, போலந்தின் அக்னீஸ்கா, கனடா வின் யூஜீனி புச்சார்டு என முன்னணி வீராங்கனைகள் இருந் தாலும், நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீராங்கனையுமான செரீனா பட்டம் வெல்வதற்கே அதிக வாய்ப்புள்ளது.
ரூ.231 கோடி பரிசுத் தொகை
இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.231 கோடியாகும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக ரூ.24 கோடி வழங்கப்படுகிறது.
ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கு தலா ரூ.18 கோடியும், இரட்டையர் பிரிவுகளில் பட்டம் வெல்லும் ஜோடிகளுக்கு தலா ரூ.8 கோடியே 60 லட்சமும், கலப்பு இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்லும் ஜோடிக்கு ரூ.90 லட்சமும் ரொக்கப் பரிசாக கிடைக்கும்.