Last Updated : 18 Jul, 2018 04:29 PM

 

Published : 18 Jul 2018 04:29 PM
Last Updated : 18 Jul 2018 04:29 PM

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு: புவனேஷ்வர் குமார் நீக்கம்

இங்கிலாந்துக்கு எதிராக ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்க உள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி வீரர்கள் முதல் 3 டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும்தான் விளையாடுவார்கள். மீதமுள்ள 2 போட்டிகளுக்குப் பின்னர் அணி வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆனால், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் இழந்தது.

இந்நிலையில் ஆகஸ்ட் 1-ம் தேதி டெஸ்ட் போட்டித் தொடர் தொடங்குகிறது. நாட்டிங்ஹாமில் முதல் டெஸ்ட் போட்டி நடக்கிறது. இதில் முதல் 3 போட்டிகளுக்கான 18 வீரர்களை மட்டும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

இதில் டெஸ்ட் தொடருக்கு முதல் முறையாக டெல்லி வீரரும், விக்கெட் கீப்பருமான ரிஷாப் பந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் சிறப்பாகச் செயல்பட்டதையடுத்து, அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் உடற்தகுதியின்மையால் தேர்வாகாமல் இருந்த முகமது ஷமி டெஸ்ட் தொடருக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். அதேசமயம், ரோஹித் சர்மா டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கைவிரலில் காயம் காரணமாக நீக்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் போட்டித் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் போட்டிக்குள் உடற்தகுதியை நிரூபிக்காவிட்டால், 2-வது போட்டியில் பும்ரா விளையாடுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

டி20 போட்டிகளிலும், ஒருநாள் தொடரிலும் வாய்ப்பு பெற்ற வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

முதல் 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி விவரம்:

விராட் கோலி(கேப்டன்), ஷிகர் தவண், லோக்கேஷ் ராகுல், முரளி விஜய், சட்டீஸ்வர் புஜாரா, ரஹானே, கருண் நாயர், தினேஷ் கார்த்திக், ரிஷாப் பந்த், ஆர்.அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா, இசாந்த் சர்மா, முகம்மது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x