

இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என்றால் களத்தில் ஏற்படும் மோதல்களுக்குப் பஞ்சம் இருக்காது. மெல்பர்ன் மைதானத்தில் தொடங்கிய ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இதுபோன்றதொரு சம்பவம் பதிவானது. ஆஸ்திரேலிய அணிக்காக முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய 19 வயதேயான அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸின் தோள்பட்டையில் விராட் கோலி மோதியதால், இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் உண்டானது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இளம் தலைமுறையைச் சேர்ந்த அறிமுக வீரர் ஒருவரிடம் சீனியர் வீரர் கோலி நடந்து கொண்டவிதம் ஆரோக்கியமானதாக இல்லை எனக் கிரிக்கெட் ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் முகம் சுளிக்க வைத்துள்ளதாகப் புலம்பி வரும் கோலியின் ரசிகர்கள், ‘ஆக்ரோஷத்தை குறைத்துக் கொள்ளலாமே ‘கிங்’ கோலி’ என சமூக வலை தளங்களில் வேண்டுகோளும் விடுத்துள்ளனர். என்றாலும், ‘கிரிக்கெட் களத்தில் இதெல்லாம் சகஜம்தான்’ எனப் பக்குவமாக பதிலளித்து ‘சிக்சர்’ அடித்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் சாம் கொன்ஸ்டாஸ். - சிட்டி