Last Updated : 16 Aug, 2014 03:10 PM

 

Published : 16 Aug 2014 03:10 PM
Last Updated : 16 Aug 2014 03:10 PM

தோனி டைவ் அடித்தெல்லாம் கேட்ச் பிடிக்க மாட்டார்: ஃபீல்டிங் பயிற்சியாளரின் விசித்திரப் பேச்சு

இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்லிப் ஃபீல்டிங் மிக மோசமடைந்து வருவதாக விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் அதைப் பற்றி பெரிதாகப் பதட்டமடையத் தேவையில்லை என்று இந்திய ஃபீல்டிங் பயிற்சியாளர் டிரவர் பென்னி கூறியிருப்பது கிரிக்கெட் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்லிப் ஃபீல்டிங் அமைப்புச் சரியில்லை என்ற விமர்சனங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. தோனிக்கும் முதல் ஸ்லிப்பிற்கும் இடையே கொஞ்சம் இடைவெளி அதிகம் இருக்கிறது என்று கூறப்பட்டு வருகிறது.

மேலும் ஸ்லிப்பிற்கும், தோனிக்கும் இடையே சில கேட்ச்கள் செல்கின்றன. தோனி அதற்குச் செல்வதில்லை என்ற புகார்களை வர்ணனையாளர்கள் எழுப்பியவன்ணம் உள்ளனர்.

இன்னும் மோசமானது, முதல் ஸ்லிப்பிற்கு முன்னால் கேட்ச் ஆகச் செல்லும் பந்துகளுக்கு பொதுவாக விக்கெட் கீப்பர்தான் டைவ் அடித்துச் செல்வது வழக்கம். ஆனால் தோனி அதையும் செய்வதில்லை. இதனால் அவரது விக்கெட் கீப்பிங் மீதும் அவரது உடல் தகுதி மீதும் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் டேவிஸ் விசித்திரமாகவும், ஆச்சரியப்படும்விதமாகவும், சப்பைக்கட்டும் விதமாகவும் கூறியுள்ளார்.

அதாவது மார்க் வாஹ், மார்க் டெய்லர் ஆகியோர்களே ஸ்லிப்பில் கேட்ச்களை விட்டிருக்கின்றனராம்.

ஃபீல்டிங் பயிற்சியாளர் டிரவர் பென்னி கூறியிருப்பது அதைவிடவும் சிறந்த சப்பைக் கட்டாக இருக்கிறது:

"கிரிக்கெட்டில் இதெல்லாம் சகஜம். ஸ்லிப்பில் கேட்ச் விடுவது பற்றி நாங்கள் விவாதித்து வருகிறோம், பதட்டப்படவேண்டிய அவசியமில்லை. முதல் ஸ்லிப் பீல்டர் கேட்ச் பிடிக்கட்டும் என்று தோனி விட்டுவிடுகிறார். இதனை முதல் ஸ்லிப் பீல்டர் அறிந்து செயல்படுவது அவசியம். தோனி முதல் ஸ்லிப்பில் டைவ் அடித்துக் கேட்ச் பிடிக்கமாட்டார் என்பதை அந்த ஸ்லிப் ஃபீல்டர் புரிந்து கொண்டால் போதும்.

சிலவற்றைப் பிடிக்க முடிகிறது. சில கேட்ச்களை பிடிக்க முடிவதில்லை. இங்கிலாந்தும் கூட சில கேட்ச்களை கோட்டை விடுகிறது. எனவே இதனைச் சரிசெய்ய பல்வேறு ஸ்லிப் சேர்க்கைகளை யோசித்து செயல்படுத்தி வருகிறோம். பதட்டப்பட வேண்டியதில்லை” என்று கூறியுள்ளார்.

பென்னியின் விசித்திரப் பேச்சு நம்முள் எழுப்பும் கேள்விகள்:

இதே போல் எந்த அணியிலாவது ஒரு விக்கெட் கீப்பர்க்கு வக்காலத்து வாங்க முடியுமா? அல்லது தோனிக்கு அளிக்கப்படும் இந்தச் சலுகை நாளை சஹாவிற்கு அளிக்கப்படுமா? அல்லது நமன் ஓஜா கேட்ச் விட்டால் அவர் அப்படித்தான் என்று கூறமுடியுமா? அல்லது தினேஷ் கார்த்திக்கிற்கு இத்தகைய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதா?

இதே பாணி வாதத்தை இன்னும் நீட்டிக் கொண்டே போனால், தோனி பேட்டிங்கில் ரன்கள் எடுக்கப்போவதில்லை இதனை மற்ற வீரர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூட கூற முடியுமோ?

அல்லது கோலிக்கு சரியாக ஆடவரவில்லை என்று தெரிகிறதே பிறகு ஏன் அவரை எதிர்பார்க்கிறீர்கள் மற்றவர்கள் ரன் எடுக்க வேண்டியதுதானே என்று கூற முடியுமா?

அல்லது தோனிக்கு டெஸ்ட் கேப்டன்சி வரவில்லை என்பதை மற்ற வீரர்கள் புரிந்து கொண்டு அவரவர் கேப்டன்சி செய்து கொள்ள வேண்டியதுதானே என்று கூட கூற முன்வரும் போலிருக்கிறதே இந்திய நிர்வாகம்.

வேறு எந்த அணி நிர்வாகத்திலாவது கேப்டனின், வீரர்களின், விக்கெட் கீப்பரின் இயலாமையை இவ்வாறு வக்காலத்து வாங்கி பேசி கேட்டிருக்கிறோமா?

இந்திய அணிதான் தோற்றுவிடும் என்று தெரியுமே ரசிகர்கள், ஊடகங்கள் இதனைப் புரிந்து கொண்டால் பிரச்சினை எதுவும் இல்லை என்று கூட நாளை நம் கிரிக்கெட் அணி நிர்வாகம் கூறினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x