

சென்னை: 30-வது சப்-ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே உண்டு உறைவிட பள்ளியில் வரும் 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழகம் உட்பட 27 மாநிலங்களை சேர்ந்த 54 அணிகள் கலந்து கொள்கின்றன.
சிறுவர் பிரிவில் 27 அணிகளும், சிறுமிகள் பிரிவில் 27 அணிகளும் பங்கேற்று விளையாட உள்ளன. இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு கோப்பைகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. இந்த போட்டியை இந்திய நெட்பால் கூட்டமைப்பின் ஆதரவுடன் தமிழ்நாடு அமெச்சூர் நெட்பால் சங்கம் மற்றும் ஆர்எம்கே பள்ளி இணைந்து நடத்துகின்றன.
இந்தத் தொடரில் கலந்துகொள்ளும் தமிழக ஆடவர் அணியின் கேப்டனாக எஸ்.வைரவேலும், மகளிர் அணியின் கேப்டனாக லக்சனா சாய் யலமாஞ்சியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தகவலை சென்னையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது ஆர்எம்கே கல்வி குழுமத்தின் செயலாளர் யலமஞ்சி பிரதீப் தெரிவித்தார். உடன் தமிழ்நாடு அமெச்சூர் நெட்பால் சங்கத்தின் தலைவர் செல்வராசு இருந்தார்.
இந்த தொடரின் இடையே வரும் 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் கொரியாவில் நடைபெற உள்ள ஆசிய இளையோர் நெட்பால் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய மகளிர் அணி தேர்வு நடைபெற உள்ளது. இந்த அணித் தேர்வு 29-ம் தேதி காலை 10 மணிக்கு கவரைப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே உண்டு உறைவிட பள்ளியில் உள்ள உள்ளரங்க மைதானத்தில் நடைபெறுகிறது.