35 பந்துகளில் சதம் விளாசி அன்மோல்பிரீத் சிங் சாதனை

35 பந்துகளில் சதம் விளாசி அன்மோல்பிரீத் சிங் சாதனை
Updated on
1 min read

அகமதாபாத்: விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் அருணாச்சலபிரதேசம் - பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த அருணாச்சலபிரதேச அணி 48.4 ஓவர்களில் 164 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டெக்கி நேரி 42, ஹர்திக் வர்மா 38, பிரின்ஸ் யாதவ் 23, தேவன்ஷ் குப்தா 22 ரன்கள் சேர்த்தனர். பஞ்சாப் அணி தரப்பில் அஷ்வனி குமார், மயங்க் மார்க்கண்டே ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

165 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பஞ்சாப் அணி 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அன்மோல்பிரீத் சிங் 45 பந்துகளில், 9 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 115 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். பிரப்சிம்ரன் சிங் 35, கேப்டன் அபிஷேக் சர்மா 10 ரன்கள் சேர்த்தனர். அன்மோல்பிரீத் சிங் 35 பந்துகளில் சதம் விளாசியிருந்தார்.

இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்களில் குறைந்த பந்துகள் சதம் விளாசிய இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார் அன்மோல்பிரீத் சிங். இந்திய வீரர்களில் இதற்கு முன்னர் பரோடா அணிக்காக விளையாடிய யூசுப் பதான், கடந்த 2010-ம் ஆண்டு மகாராஷ்டிரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 40 பந்துகளில் சதம் அடித்து இருந்தார். இந்த சாதனையை தற்போது முறியடித்து புதிய சாதனை நிகழ்த்தி உள்ளார் அன்மோல்பிரீத் சிங்.

உலக அரங்கில் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டியில் குறைந்த பந்துகளில் சதம் விளாசியவர்களின் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளார் அன்மோல்பிரீத் சிங். இந்த வகையில் ஆஸ்திரேலியாவின் ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் 2023-ம் ஆண்டு டாஸ்மேனியா அணிக்கு எதிராக 29 பந்துகளில் சதம் விளாசியிருந்தார். தென் ஆப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் 2015-ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 31 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in