

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் திடீரென்று விலகியதையடுத்து, பலதரப்பட்ட யூகங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தனக்கும் அஸ்வினுக்கும் சண்டை என்று சமூக ஊடகங்களில் பரப்பப்படுவது குறித்து ஹர்பஜன் சிங் யூடியூப் சேனலில் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், ‘அஸ்வின் ஒரு ஆகச் சிறந்த பவுலர்’ என்று புகழாரமும் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஹர்பஜன் சிங் கூறியது: “சமூக வலைதளங்களில் எனக்குத் தேவைப்படும் அளவுக்கு மட்டுமே பயன்படுத்துவேன். எனக்கும் அஸ்வினுக்கும் கருத்து வேறுபாடோ அல்லது சண்டையோ இருந்தால், என்ன பிரச்சினை என்று அவரிடமே நேரடியாகக் கேட்டு விடக்கூடியவன் தான் நான்.
ஆனால் இவர்களெல்லாம் பேசுவது போலவோ, எழுதுவது போலவோ எதுவும் இல்லை. இனியும் அப்படி இருக்காது. அவருக்குக் கொடுக்கப்பட்டதை அவர் பெறுவார், எனக்குக் கொடுக்கப்பட்டதை நான் பெறுவேன், இதுதான் விதி. இந்தியாவின் மிகச் சிறந்த பவுலர் அஸ்வின். அவரது சாதனைக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ட்விட்டரில் சில பேர் எங்களுக்கு இடையே பிரச்சினை இருப்பதாக திரித்துக் கூறுகின்றனர். அப்படி எழுதுபவர்களின் கருத்து அது. நான் என் கருத்தை வெளிப்படையாகவே, உரக்கப் பேசி வருகிறேன்.
இந்தியாவில் இந்திய அணி ஆடும் பிட்ச்கள் நல்ல கிரிக்கெட்டுக்கு உகந்ததல்ல என்ற விமர்சனத்தில் நான் தெளிவாகவே இருக்கிறேன். பந்துகள் கண்டபடி திரும்புகின்றன, போட்டிகள் இரண்டு அல்லது இரண்டரை நாட்களில் முடிந்து விடுகின்றன. இவ்வாறுதான் கூறுகிறேன். என்னுடைய இந்தக் கருத்தில் மாற்றமில்லை.” என்று ஹர்பஜன் சிங் கூறினார்.
இந்தியப் பிட்ச்கள் ஒரு கட்டத்தில் அஸ்வினுக்கும் ஜடேஜாவுக்கு எனத் தயாரிக்கப்பட்டது என்ற விமர்சனங்கள் சில ஆண்டுகளாகவே இந்திய கிரிக்கெட் மீது இருந்து வருவது உண்மைதான். ஹர்பஜனும் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்.
அதாவது, சுலபமான பிட்ச்களில் பந்து வீசி வீசி கடினமான ஸ்பின் அல்லாத பிட்ச்களில் பந்தைத் திருப்பும் கலையை அஸ்வின் மறந்துவிட்டார் என்பது சமீபமாக அவரது உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலும் தெரியவந்தது.
அதோடு, ஸ்பின்னர்களுக்கே உரிய பிளைட், டிரிஃப்ட், லூப் போன்றவை அவரது பந்துகளில் இல்லாமல் போனதையும் விமர்சகர்கள் சிலர் சுட்டிக் காட்டியுள்ளனர். இதற்குக் காரணம் குழிப் பிட்ச்களில் வெகு சுலபமாக எல்.பி.டபிள்யூக்களைப் பெறுவதில் அவரது கவனம் முழுதும் செலவிடப்பட்டது என்ற விமர்சனமும் அஸ்வின் மீது உண்டு.
இத்தகைய விமர்சனங்களை ஹர்பஜன் சிங் எழுப்பினார் என்பதற்காக அவர் ஏதோ அஸ்வினின் பகைவர் என்பது போல் சமூக ஊடகங்களில் சில அரைகுறைகள் திரிப்பதும் முழு முற்றான தவறே என்பதும் கிரிக்கெட் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.