

கிங்ஸ்டவுன்: மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் வங்கதேச அணிக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் எதிரணி வீரர் களத்தில் வலியால் துடிப்பதை கண்டு ரன் எடுப்பதை தவிர்த்தார் வங்கதேச வீரர் ஜாகிர் அலி அனிக். அவரது இந்த உன்னத செயல் அசலான ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட்டின் அடையாளம் என பலரும் போற்றி வருகின்றனர்.
வங்கதேச கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இந்திய நேரப்படி நேற்று இரவு நடைபெற்றது.
கிங்ஸ்டவுனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 189 ரன்களை குவித்தது. ஜாகிர் அலி, 41 பந்துகளில் 72 ரன்களை சேர்த்தார். இறுதிவரை அவர் ஆட்டமிழக்கவில்லை. அவரது பங்களிப்பு வங்கதேச அணிக்கு பெரிதும் உதவியது.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 14-வது ஓவரின் முதல் பந்தை மிட்விக்கெட் திசையில் விளாசினார் ஜாகிர் அலி. அதோடு ரன் எடுப்பதற்காக தனது ஓட்டத்தை தொடங்கினார். இரண்டு ஓட்டங்களை நிறைவு செய்த அவர், பந்தை கேட்ச் பிடிக்க முயன்று டைவ் அடித்த எதிரணி வீரர் மெக்காய், களத்தில் வலியால் துடித்ததை கண்டு மூன்றாவது ஓட்டத்துக்கான வாய்ப்பு இருந்தும் ரன் எடுக்க மறுத்தார். அவரது இந்த செயல் கவனம் ஈர்த்துள்ளது.
இந்தப் போட்டியை 80 ரன்களில் வென்றது வங்கதேசம். தொடரையும் 3-0 என்ற கணக்கில் அந்த அணி வென்றது. ஆட்ட நாயகன் விருதை ஜாகிர் அலி வென்றார்.