

அடிலெய்டு: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வரும் அடிலெய்டு பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் சதம் விளாசினார். அவரது விக்கெட்டை இந்திய பவுலர் முகமது சிராஜ் கைப்பற்றினார். அப்போது ஹெட் சொன்னதற்கு சிராஜ் எதிர்வினை ஆற்றினார்.
இந்நிலையில், அது குறித்து ஹெட் பேசியுள்ளார். “சிறப்பாக பந்து வீசினீர்கள் என நான் சொன்னேன். ஆனால், அதை அவர் வேறு விதமாக புரிந்து கொண்டார் என நினைக்கிறேன். அது களத்தில் நடந்தது. என்னை வெளியேறுமாறு சொன்னார். அவரது ரியாக்ஷன் எனக்கு சர்ப்ரைஸாக இருந்தது.
இந்தப் போட்டியில் நான் ஆட்டத்தை தொடங்கிய விதம் எனக்கு நிறைவு தருகிறது. அஸ்வினை எதிர்கொண்ட வகையிலும் எனது ஆட்டம் எனக்கு திருப்தி தருகிறது. புதிய பந்தை எதிரணி பெறுவதற்கு முன்பாக பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க நினைத்தேன். அதை செய்தேன்” என தெரிவித்துள்ளார்.
அடிலெய்டு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 180 மற்றும் ஆஸ்திரேலியா 337 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸை இந்தியா 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடங்கியது. இந்த இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ரன்களை எடுத்து இந்தியா தடுமாறி வருகிறது. பந்த் 28 மற்றும் நிதிஷ் ரெட்டி 15 ரன்களுடன் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணிக்காக முதல் இன்னிங்ஸில் ஹெட் 140 ரன்களை பதிவு செய்தார். 17 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை அவர் விளாசினார்.