Published : 28 Jun 2018 09:17 AM
Last Updated : 28 Jun 2018 09:17 AM

ஐஸ்லாந்து வெளியேற்றம்

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் டி பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் குரோஷியாவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த ஐஸ்லாந்து அணி தொடரில் இருந்து வெளியேறியது.

ரஷ்யாவின் ரோஸ்டவ் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஏற்கெனவே நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்த குரோஷியா அணியில் 9 வீரர்கள் மாற்றப்பட்டிருந்தனர். முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. 53-வது நிமிடத்தில் பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து மிலன் படேஜ், கோல் அடிக்க குரோஷியா 1-0 என முன்னிலை பெற்றது. 75-வது நிமிடத்தில் பெனால்டி பகுதியில் வைத்து குரோஷிய வீரர் லவ்ரென் கையில் பந்து பட்டது. இதனால் ஐஸ்லாந்து அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி கில்ஃபி சிகுர்ட்ஸன் கோல் அடிக்க ஆட்டம் 1-1 என்ற சமநிலையை எட்டியது.

90-வது நிமிடத்தில் மிலன் படேஜின் உதவியுடன் பந்தை பெற்ற இவான் பெரிஸிக் கோல்கம்பத்தின் வலது ஓரத்தில் பந்தை அணிக்கு குரோஷியா 2-1 முன்னிலையை பெற்றது. இதன் பின்னர் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட நேரத்தில் மேற்கொண்டு கோல்கள் அடிக்கப்படவில்லை. முடிவில் குரோஷியா 2-1 என்ற கோல் கணக்கில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.

இதன் மூலம் 9 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்த குரோஷியா, நாக் அவுட் சுற்றில் வரும் 1-ம் தேதி டென்மார்க் அணியை எதிர்கொள்கிறது. அதேவேளையில் அறிமுக அணியான ஐஸ்லாந்து அணி இரு தோல்வி, ஒரு டிராவுடன் தொடரில் இருந்து வெளியேறியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x