

ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் நேற்று (நவ.15) நடைபெற்ற 4-வது இறுதி டி20 போட்டியில் சஞ்சு சாம்சன், திலக் வர்மா இருவரும் சதம் எடுக்க இந்திய அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 283 ரன்களை எடுக்க மீண்டும் ஆடிய தென் ஆப்பிரிக்கா 148 ரன்களை மட்டுமே எடுத்து படுதோல்வி கண்டது.
இந்தப் போட்டியில் பல டி20 சாதனைகள் உடைத்து நொறுக்கப்பட்டன அவை வருமாறு: இந்திய அணி 20 ஓவர்களில் எடுத்த 1 விக்கெட் இழப்புக்கு 283 என்ற ரன் எண்ணிக்கை டி20 சர்வதேச போட்டிகளில் 5-வது பெரிய ரன்களாகும். இது இந்திய அணியின் 2-வது அதிகபட்ச டி20 ஸ்கோர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம்தான் வங்கதேசத்தை போட்டு நொறுக்கி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 297 ரன்கள் எடுத்தது நினைவிருக்கலாம்.
ஒரே டி20 போட்டியில் இருவர் சதம் எடுப்பது இது 3-வது முறையாகும். செக்.குடியரசின் சபாவூன் டாவிஸி, டைலன் ஸ்டெய்ன் 2022-ல் பல்கேரியாவுக்கு எதிராக இத்தகைய சாதனையை முதன் முதலில் நிகழ்த்தியுள்ளனர். பிறகு ஜப்பானின் காடாவாக்கி மற்றும் யமாட்டோ ஜோடி சீனாவுக்கு எதிராக இதே சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
250 ரன்களுக்கும் கூடுதலாக இந்தியா எடுப்பது இது 3-வது முறை. வேறு எந்த அணியும் இதைவிட அதிக 250+ ஸ்கோர்களை எடுத்ததில்லை. பொதுவாக டி20 அணியில் சர்ரே மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எடுத்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாதான் 3 முறை எடுத்து சாதித்துள்ளது.
சஞ்சு சாம்சன், திலக் வர்மா இடையே 210 ரன்கள் கூட்டணி இதுவே இந்தியாவுக்கு முதல் முறை. அதாவது டி20 சர்வதேசப் போட்டிகளில் இரட்டைச் சதம் கூட்டணி அமைவது இந்தியாவுக்கு இதுவே முதல் முறை. ஏற்கெனவே ரோஹித் சர்மா, ரிங்கு சிங் இடையே ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 5-வது விக்கெட்டுக்காக சேர்த்த 190 ரன்கள்தான் இதுவரை அதிகம்.
23 சிக்ஸர்கள் என்பது 3-வது முறையாக அதிக சிக்ஸர்கள் ஆகும். காம்பியாவுக்கு எதிராக ஜிம்பாப்வே 27 சிக்ஸர்களை விளாச, மங்கோலியாவுக்கு எதிராக நேபாளம் 26 சிக்ஸர்களை விளாசியது சாதனைகளாகும். சீனாவுக்கு எதிராக ஜப்பானும் 23 சிக்ஸர்களை விளாசியது குறிப்பிடத்தக்கது.
மிடில் ஓவர்கள் என்று குறிக்கப்படும் 7-வது ஓவர் முதல் 16-வது ஓவர் வரையிலான ஓவர்களில் 157 ரன்களை விளாசியது இதுவே முதல் முறை இந்த விதத்தில் இது ஒரு மிடில் ஓவர் டி20 உலக சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவுக்கு எதிராக ஜப்பான் விக்கெட் இழப்பின்றி எடுத்த 258 ரன்கள்தான் எடுத்ததுதான் இரட்டைச் சத ரன் எண்ணிக்கையில் விக்கெட்டுகள் அதிகம் விழாமல் எடுக்கப்பட்ட ரன் எண்ணிக்கையாகும். இப்போது இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் என்பதும் இந்த வகையில் 2-வது சாதனையாகத் திகழ்கிறது.